இந்தியாவில் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை அறிவித்தது.
நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என்றும் 145 நிலக்கரி சுரங்கங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாரதீய ஜனதா வற்புறுத்தி வருகிறது. இந்த பிரச்சினையால் ஏற்பட்ட அமளியால் பாராளுமன்றம் கடந்த 12 நாட்களாக முடங்கி கிடக்கிறது.
பாரதீய ஜனதாவின் கோரிக்கையை நிராகரித்த காங்கிரஸ் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அறிவித்தது.
அதன்படி சி.பி.ஐ. தனது விசாரணையை முடுக்கி விட்டது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, பாட்னா, ஐதராபாத், ஆகிய நகரங்களில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்க நிறுவனங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலங்களில் உள்ள நிலக்கரி நிறுவன அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்தில் 3 மாநில முதல்-மந்திரிகள் சிக்குகிறார்கள். சத்தீஷ்கர் மாநில முதல்- மந்திரி ராமன்சிங், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி அர்ஜுன் முண்டா, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
இது தவிர ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரிகள் மதுகோடா, சிபுசோரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி கூறும்போது, எங்களது விசாரணையில் நிலக்கரி சுரங்கங்கள் மாநில அரசின் பரிந்துரையின் பேரில் கம்பெனிகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பெனியில் சில ஒதுக்கீடு பெற தகுதியற்றது என தெரிய வந்துள்ளது.
பல கம்பெனிகள் சுரங்கங்களை பெற்று எந்த பணியையும் செய்யவில்லை. எனவே அந்த கம்பெனிகளுக்கு உள் நோக்கத்துடன் ஒதுக்கீடு வழங்கப்பட்டதா? என்பது குறித்து நாங்கள் விசாரிக்க உள்ளோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment