நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று முடிவடையும் நிலையில், இன்று இரவு அல்லது அடுத்த இரு நாட்களுக்குள் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 வரை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வைக் காரணம் காட்டியும், இதனால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகக் கூறியும் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை உயர்த்தக் கோரி வருகின்றன.
நாளொன்றுக்கு தங்களுக்கு ரூ. 550 கோடி இழப்பு ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன.
பெட்ரோலோடு டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலைகளையும் உடனே உயர்த்த வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இந் நிலையில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகமும் ஒப்புதல் வழங்கிவிட்டது.
2 நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவைக்கு இது தொடர்பான பரிந்துரையை பெட்ரோலிய அமைச்சகம் அனுப்பியது. அதில் மாத வருமானம் ரூ. 50,000க்கு மேல் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் கேஸ் வழங்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது தொடர்பான கொள்கை முடிவை உடனே எடுக்க மத்திய அரசு தயாராக இல்லை. மேலும் நிலக்கரி ஊழல் விவகாரம் வெடித்துள்ள நிலையில் டீசல் விலையை உயர்த்தி விலைவாசி உயர்வுக்குக் காரணமாகி, மக்களின் எரிச்சலுக்கு ஆளாக மத்திய அரசு விரும்பவில்லை.
இதனால் வழக்கம் போல் உடனடியாக பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 5 வரை விலை உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அமலுக்கு வரும் அல்லது அடுத்த இரு நாட்களில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்- டீசல் விலையை உயர்த்துவதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலையை உயர்த்தினால் போராட்டம் நடத்தப்போவதாக அந்த கட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 4 தடவை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி விவகாரம் கொஞ்சம் தணிந்தவுடன் விரைவிலேயே டீசல் விலை உயர்வும் அமலுக்கு வரலாம்.
No comments:
Post a Comment