Wednesday, September 5, 2012

சிவகாசி பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து: 45 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் ஓம்சக்தி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி இன்று பட்டாசு தயாரிப்ப தில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக வேலைபார்த்து வந்தனர். 40-க்கும் மேற்பட்ட அறையில் பட்டாசு தயாரிப்பு நடைபெற்று வந்தது. 

இன்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது. அதில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பெரும்பாலான பகுதிகளில் பரவி உள்ளதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறைகள் வெடித்து சிதறியதாலும் தீ ஜுவாலையினாலும் அருகே நெருங்க முடியவில்லை. ஆனாலும் கடும் சிரமத்துடன் அவர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பற்றி எரிந்த தீயை வேடிக்கை பார்க்க வந்த 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு புகையால் மயக்கம் அடைந்தனர். அவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

தொழிற்சாலையின் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் கிடந்த 6 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொடர்ந்து உள்ளே வெடி சத்தம் கேட்டுக்கொண்டு இருப்பதால் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தில் 45 பேர் பலியாகினர். 60 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகளும், போலீசாரும் விரைந்துள்ளனர்.1 comment:

 1. அன்புடையீர் வணக்கம்.
  சிவகாசி வெடி விபத்து மட்டுமல்ல இது போன்ற சம்பவங்கள் எங்கு எப்படி நடந்தாலும் வருந்த்தக்கதே,கண்டிக்கதக்கதே.
  அதே சமயம் இது மாதிரி நடைபெறும் அசம்பாவிதங்களில் எல்லோரும் கிட்டதட்ட அனைவருமே அரசாங்கத்தைக் குறை சொல்வதே வாடிக்கை.அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி.
  ஏன் மக்களாகிய நமக்கு பங்கு இல்லையா?
  ஒரு வாதத்திற்கு பேசுவோம்.அரசாங்கமும் அதிகாரிகளும் தவறே செய்கிறார்கள்.ஆனால் மக்களாகிய நாம் சரியாக இருக்கலாமே? அங்கு பட்டாசுத் தொழிலை நடத்தும் அதிபர்களும் மக்கள்தானே.
  நாம் நடத்தும் தொழிலை நியாயமாகவும்,நேர்மையாகவும் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இயக்குவேன் என மக்களாகிய நாம் முடிவு செய்து விட்டால் யாருக்கும் லஞ்சம் தந்து செயல்பட வேண்டியது இல்லையே?
  ஒரு ரூபாய்க்கு பட்டாசு தயாரித்தால் மூன்று ரூபாய் இலாபம் என்ற பேராசைதானே இத்தனை உயிர் பலிகளுக்கு காரணம்.
  ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் வேலை,நியாமான கூலி,தகுந்த பாதுகாப்பு இருந்தால்தான் வேலை செய்வேன் என்று முடிவு செய்தால் மற்றொரு சக தொழிலாளி அதை விட குறைவாகவும்,எந்த கட்டுபாடும் இல்லாமல் வேலை செய்கிறேன் என போய் நிக்கிறான்.
  அரசாங்கமும் அதிகாரிகளும் கடும் நடவடிக்கை எடுத்தால் அங்குள்ள மற்ற கட்சிகள் (ஆளும் கட்சி எதுவாக இருந்தாலும்) தொழிலாளிகளை முடிக்கிவிட்டு வேலை வாய்ப்பு இல்லை,பண்டிகை காலத்தை நாங்களும் எங்கள் குடும்பமும் எப்படி கொண்டாடுவது?சோற்றுக்கே வழி இல்லை என கோசம் போட வைக்கிறார்கள்.
  ஆக இதற்கு நிரந்தர தீர்வு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும்.சட்டத்தின் விதிகளை கடுமையாக அனைவரும் பின்பற்ற வேண்டும்.
  நன்றி.வணக்கம்.
  கொச்சி தேவதாஸ்

  ReplyDelete