சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலை மற்றும் அண்ணாநகர் 3வது நிழற்சாலை சந்திப்புகளை இணைக்கும் பகுதியில் 2 மேம்பாலங்களும், ஒரு சுரங்கப்பாதையும் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஈடுபட்டுள்ளது.
இதற்கு இடையூறாக உள்ள அண்ணா நுழைவு வாயிலை இடிக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறை கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள நவீன கருவிகள் தொடர்ந்து பழுது ஏற்பட்டு குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாமல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:-
நெடுஞ்சாலை பணிக்கு இடையூறாக உள்ளவற்றை இடித்து தள்ளித்தான் எங்களுக்கு பழக்கம். மாறாக இதுபோன்று நுழைவு வாயில்களை டைமண்ட் கட்டிங் என்ற நவீன தொழில்நுட்பத்தில் வெட்டி எடுக்கும் அனுபவம் எங்களுக்கு கிடையாது. பணியில் ஈடுபடுத்த நவீன கருவிகளும், பணியாளர்களும் எங்களிடம் இல்லை.
இதனால் இந்த நுழைவு வாயிலை 2 நாள் அவகாசத்தில் ரூ.8.20 லட்சம் செலவில் இடிக்க தனியாரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 26 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நுழைவு வாயில் அமைக்க ரூ.7.47 லட்சம் செலவாகி உள்ளது. ஆனால் தற்போது இடிக்க மட்டும் ரூ.8.20 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.
மாநகராட்சியின் சொத்தான இந்த நுழைவு வாயிலை இடித்து பாலம் அமைத்த பின்னர் மாநகராட்சி கூறும் இடத்தில் இதுபோன்ற நுழைவு வாயில் கட்டிதரவேண்டும் என்று மாநகராட்சியிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டித்தர நெடுஞ்சாலைத்துறை தயாராக இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் இதே அளவு நுழைவு வாயில் கட்ட ரூ.1 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது கிராமங்களில் கூறப்படும் பழமொழி போல் சுண்டக்காய் கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பது போல் உள்ளது.
இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்பதால் வரும் காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாதவாறு இதுபோன்ற நுழைவு வாயில்களை அமைப்பது அனைவருக்கும் நல்லது என்று நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்களில் கூறப்பட்டது.
இதுகுறித்து ஒப்பந்தகாரர்கள் கூறியதாவது:-
அண்ணா நுழைவு வாயில் அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நவீன கிரேன் ரூ.16 கோடி மதிப்பு கொண்டது. இந்த கிரேன் 450 டன் எடையை தாங்கும் சக்தி கொண்டது. ஆனால் அண்ணா நுழைவு வாயில் வெறும் 82 டன் எடை மட்டும் கொண்டிருப்பதால் நவீன கிரேனுக்கு 30 சதவீத பணிபழு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பக்குவமாக தான் அகற்ற முடியுமே தவிர, அவசரப்பட்டால் காரியம் வீணாகிவிடும். நாங்கள் தொழிலாளர்களின் உயிரையும், கோடிக்கணக்கு மதிப்புள்ள கருவியையும் பார்க்க வேண்டி உள்ளது.
இவ்வாறு ஒப்பந்தகாரர்கள் கூறினர்.
No comments:
Post a Comment