இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதனால், தமிழ்நாட்டில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை வாசிகள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதை சுட்டிக் காட்டியுள்ள இலங்கை அரசு, மறு உத்தரவு வரும்வரை, தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கைவாசிகளுக்கு அறிவுரை கூறியுள்ளது.
இந்த அறிவுரை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் சையது அக்பருதினிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு சையது அக்பருதின் கூறியதாவது:-
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் எந்த பகுதிக்கும் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கைவாசிகள் வந்தால், அவர்களின் நலன்கள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை நடத்தி மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து அதுபோல் நடவடிக்கை எடுக்கும்.
இதுதொடர்பாக, இலங்கை அரசு விடுத்த அறிவுரையை கவனத்தில் கொண்டுள்ளோம்.
இதுதொடர்பாக, இலங்கை அரசு விடுத்த அறிவுரையை கவனத்தில் கொண்டுள்ளோம்.
அதே சமயத்தில், சில சந்தர்ப்பங்களில், உரிய அதிகாரிகளிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் இலங்கை பிரதிநிதிகள் தமிழ்நாட்டுக்கு வரும் சம்பவங்களையும் நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்தியா-இலங்கை இடையே வரலாற்றுரீதியான, இனரீதியான, கலாசார, நாகரீக உறவு நிலவி வருகிறது. இந்த உறவின் ஒரு அங்கமாக மக்கள் இடையிலான தொடர்பு திகழ்ந்து வருவதை குறிப்பிட விரும்புகிறோம்.
அந்தவகையில், கடந்த ஆண்டு கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், சுமார் 2 லட்சம் இலங்கைவாசிகள் இந்தியா வருவதற்கு விசா கொடுத்துள்ளது. அதுபோல், இந்தியாவைச் சேர்ந்த 1 3/4 லட்சம் பேர் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். இந்த கண்ணோட்டம்தான், இதுபோன்ற விவகாரங்களில் எங்கள் செயல்பாடுகளுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment