எம்.ஆர்.எப் வேகப்பந்துவீ்ச்சு அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளருமான டென்னிஸ் லில்லி, கிரிக்கெட் போட்டிகளில் வேகப்பந்து வீசுவது எப்படி என்பது குறித்து ஆன்லைனில் பயிற்சி வகுப்பு நடத்த போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து டென்னிஸ் லில்லி கூறியதாவது,
எம்.ஆர்.எப் வேகப்பந்துவீச்சு அறக்கட்டளையில் இருந்து ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து எனது பயிற்சியாளர் பணியை வேறு வழிகளில் தொடர விரும்புகிறேன். இதற்காக டென்னிஸ் லில்லி ஆன்லைன் பயிற்சி வகுப்பை, இணையதளத்தில் துவங்க திட்டமிட்டுள்ளேன். இதுவரை கிரிக்கெட் உலகில் வேகபந்துவீச்சு முறைகளை யாரும் ஆன்லைனில் கற்று கொடுத்தது இல்லை. எனவே முதல் முறையாக இந்த திட்டத்தை நான் துவக்க உள்ளேன்.
ஆன்லைன் வேகப்பந்துவீச்சு பயிற்சி வகுப்பு பல நிலைகளை கொண்டது. இதில் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிப்பது, ஒரு குழுவாக உள்ள அணிக்கு பயிற்சி அளிப்பது, பயிற்சியாளரின் ஆலோசனைகள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். கிரிக்கெட் போட்டிகளில் காயமடைந்த வீரர்கள் விரைவாக மீண்டு வரும் முறைகளை வீடியோ படங்களுடன் விளக்கப்பட உள்ளது.
வேகப்பந்துவீச்சு பயிற்சியை பெற விரும்பும் உலகில் உள்ள எந்த கிரிக்கெட் வீரரும், இதை பயிற்சி வகுப்பை எளிதாக பயன்படுத்தி கொள்ளலாம்.
இதற்காக நான் பயன்படுத்த தீர்மானித்துள்ள சாப்ட்வேர் மூலம் ஒரு பந்துவீச்சாளரின் ஓடும் தன்மை, பந்துவீசும் நிலைகள், பந்துவீசும் முறை உள்ளிட்ட தகவல்களை வீடியோ படங்களாக பெற்று கொள்ள முடியும். இதன்மூலம் ஒரு பந்துவீச்சாளரின் குறைகளை எளிதாக கண்டறிந்து, ஆலோசனைகள் வழங்க முடியும்.
ஆன் லைனில் பயிற்சி வகுப்பு நடத்த பல தொழிற்நுட்ப வல்லுநர்கள், பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே இந்த பயிற்சியை இலவசமாக அளிக்க முடியாது. பயிற்சிக்கான கட்டணத்தை குறைக்கும் வகையில், பல விளம்பரதாரர்களை அணுகி உள்ளோம். இதன்மூலம் பயிற்சி வகுப்பை விரிவுப்படுத்தி, அதிக வீரர்களுக்கு பயிற்சி வழங்க முடியும் என்று நம்புகிறேன். இதற்காகவே எம்.ஆர்.எப். வேகப்பந்துவீச்சு அறக்கட்டளையின் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றேன்.
ஆன்லைன் பயிற்சி வகுப்பு துவங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் பயிற்சி வகுப்பு செயல்பட துவங்கும் என்று நினைக்கிறேன். இதற்காக நான் நம்பிக்கையான சில பயிற்சியாளர்களை தேர்வு செய்துள்ளேன்.
பயிற்சி வகுப்பில் 10 வயதிற்கும் மேற்பட்ட விருப்பமுள்ள வீரர்கள் கலந்து கொள்ளலாம். நேரடியாக பயிற்சி மேற்கொள்ள முடியாவிட்டாலும், ஆன்லைனில் வீரர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ஆராய்ந்த பிறகே ஆலோசனைகள் வழங்கப்படும்.
கிரிக்கெட் உலகில் நான் கற்று கொண்ட நுணுக்களையும், அனுபவங்களையும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அளித்து சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும் என்றார்.
No comments:
Post a Comment