நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல் வைத்தால் தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக்கு 20 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பிருப்பதாக என்டிடிவி - இஸ்போஸ் தேர்தல் கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது.
தற்போது பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டால், அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி கருத்து கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கணிப்பில், மாநிலத்தில் உள்ள 2 சட்டமன்றத் தொகுதியை மாதிரிக்கு எடுத்துக் கொண்டு, அதில் 100 பேரைத் தேர்வு செய்து கருத்துக் கேட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு 20 இடங்களும், தி.மு.க. கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. 1 தொகுதியில் வேறு கட்சி வேட்பாளர் ஜெயிக்கும் நிலை உள்ளதாம்.
இப்போதைய நிலையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில், திமுக - காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களைப் பெற்றுள்ளது. தனி ஈழம் பெற்றுத் தருவேன் என பிரச்சாரம் செய்த ஜெயலலிதாவின் அதிமுகவுக்கு 10 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
ஜெயலலிதா சிறந்த முதல்வர்...50 சதவீதம் பேர் வாக்கு
தமிழகத்தின் சிறந்த முதல்வர் ஜெயலலிதா என 50 சதவீதம் பேர் கருத்துக் கணிப்பில் வாக்களித்திருப்பதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு, எப்படி இருக்கும் என்று என்.டி. டி.வி. தொலைக்காட்சி நிறுவனம், இஸ்போஸ் என்ற அமைப்புடன் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.
125 பாராளுமன்றத் தொகுதிகளில் உள்ளவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தினமும் என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் மத்திய பிரதேசம், சதீஷ்கர் மாநிலங்களில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரியவந்தது.
ஒடிசாவில் நடந்த கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக் சக்தி வாய்ந்த தலைவராக இருப்பது தெரிந்தது. நேற்று தமிழக நிலவரம் தொடர்பான கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் சிறந்த முதல்வர் யார் என்று கருத்துக் கணிப்பில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 50 சதவீதம் பேர் ஜெயலலிதாதான் சிறந்த முதல்வர் என்று கூறியுள்ளனர்.
கருணாநிதி மிகச்சிறந்த நிர்வாக திறமை கொண்டவர் என்று 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர். மு.க.ஸ்டாலினுக்கு 18 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது.
அ.தி.மு.க. ஆட்சியின் செயல்பாடு எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 58 சதவீதம் சிறப்பான ஆட்சி நடப்பதாக கூறியுள்ளனர். 42 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் தி.மு.க.வினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கேள்விக்கு 59 சதவீதம் பேர் ஆமாம் தொடர்பு உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு உலையைத் திறக்க 80 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அணுஉலைகள் வேண்டும் என்றும் தமிழ்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளதாக இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தக் கருத்துக் கணிப்பு முடிவின் துல்லியத் தன்மை 3 சதவீதம் வரை மாறுபடும் வாய்ப்புள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment