இலங்கையில் இருந்து யாரும் தமிழ் நாட்டுக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்து இருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்னையில் தமிழக அரசும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. மேலும் இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்துவதில் இலங்கை அரசும் அதன் அதிபரும் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் குன்னூரில் இருக்கும் ராணுவ மையத்தில் பயிற்சி பெற இலங்கை ராணுவ அதிகாரிகள் வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் ராணுவ பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இலங்கை ராணுவ அதிகாரி களுக்கு குன்னூரில் அளிக்கப்பட்ட ராணுவ பயிற்சி நிறுத்தப்பட்டு உடனடியாக அவர்கள் தமிழ் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையில் சென்னையில் கால்பந்து பயிற்சி விளையாட்டில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் இலங்கை நாட்டை சேர்ந்த கால்பந்து அணியினர் சென்னை வந்தனர். அவர்கள் சென்னையில் கால்பந்து பயிற்சி போட்டி யில் கலந்து கொள்ள அனுமதி மறுத்ததுடன் அவர்கள் அனைவரும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா, புனித யாத்திரை, விளையாட்டு, கலாசாரம் மற்றும் பல்வேறு தொழில் பயிற்சி ஆகியவவைகளுக்காக செல்பவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சம்பவங்களை இலங்கை அரசு வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே இலங்கைவாசிகள் தமிழ்நாட்டிற்கு செல்வதை பாதுகாப்பு கருதி, மறு உத்தரவு வரும் வரை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இலங்கை நாட்டினர் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை இருக்குமேயானால், தமிழ்நாட்டிற்கு செல்வது பற்றி முன் கூட்டியே சென்னையில் உள்ள இலங்கை தூதர் அலுவலகத்துக்கு தெரிவித்து, அவரது முன் அனுமதியை பெற்று அதன் பிறகே செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இருக்கும் பூர்ணிமாதா தேவாலயத்துக்கு நேற்று சென்ற 184 இலங்கைவாசிகளை அங்குள்ளவர்கள் சுற்றி வளைத்து தொல்லை கொடுத்துள்ளனர்.
அதேபோல சென்னையில் நட்பு ரீதியில் கால்பந்து விளையாட சென்ற இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களை, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கால்பந்து விளையாட அனுமதிக்காததுடன் அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி விட்டதுடன், இலங்கை வீரர்களுக்கு சென்னையில் கால்பந்து விளையாட அனுமதி கொடுத்த தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு அதிகாரியையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதேபோல இலங்கை தமிழர்கள் பிரச்னையில் போர் குற்றம் புரிந்ததாக இலங்கை அரசின் மீது குற்றம்சுமத்தி தமிழ்நாட்டிற்கு பயிற்சிக்காக சென்ற இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். தமிழ்நாடு செல்லும் இலங்கை நாட்டினருக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் இலங்கையில் இருந்து யாரும் தமிழ்நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரிக்க விரும்புகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment