மத்திய பிரதேசத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துபேசவிருக்கிறார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நடக்கும் பௌத்த சமய மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ள வரும் 20ம் தேதி இந்தியா வருகிறார். மத்திய பிரதேசத்திற்கு வரும் அவரை அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வரவேற்கிறார். அவரது வருகைக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியினர் மத்திய பிரதேசத்திற்கே சென்று சாஞ்சியில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தவிருக்கின்றனர்.
இந்நிலையில் ராஜபக்சே தனது இந்திய சுற்றுப்பயணத்தின்போது டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து பேசவிருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அவர் சாஞ்சி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி செல்வது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே வெலிங்டனில் பயிற்சி பெறும் 2 இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்பக் கோரி தமிழகத்தில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் பூண்டி மாதா கோவிலுக்கு வந்த இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். இதையடுத்து இலங்கை மக்கள் தமிழகத்திற்கு செல்ல வேண்டாம் என்று ராஜபக்சே கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment