தமிழகத்தில் கால்பந்துவிளையாட வந்த சிங்களவர்களை தமிழகத்திலிருந்து உடனே வெளியேற்றிய தமிழக முதலமைச்சரின் நடவடிக்கைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட வந்த சிங்களவர்களை உடனே வெளியேற்றியிருக்கும் தமிழக முதலமைச்சரின் துணிச்சலான நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார பாராட்டி வரவேற்கிறது. இலங்கையில் தமிழ் உறவுகளை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்துகொண்டு திமிராக தமிழக மண்ணில் ராணுவ பயிற்சிக்கும் விளையாட்டு பயிற்சிக்கும் வந்துபோகும் இனவெறி சிங்களவருக்கு சரியான பாடத்தைப் புகட்டியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் .
கால்பந்து போட்டிகளில் விளையாட வந்த சிங்களவர்களை தமிழகத்தின் உணர்வை அலட்சியப்படுத்தி சென்னை நேரு விளையாட்டரங்கில் விளையாட அனுமதித்த அந்த அரங்கின் பொறுப்பு அதிகாரியையும் உடனடியாக தற்காலிகப் பணி நீக்கம் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிட்டிருக்கும் தமிழக முதலமைச்சரின் நடவடிக்கையும் மிகவும் பாராட்டக்குரியது.
ஈழ்த்தில் லட்சக்கணக்கானத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உதாசீனப்படுத்தி சிங்கள அரசுடன் தொடர்ந்தும் மத்திய அரசு வர்த்தக உறவுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. தமிழக அரசும் தமிழக மக்களும் எத்தனையோ முறை வலியுறுத்திப் பார்த்தும் தமிழ்நாட்டுக்கு சிங்களவர்களை ராணுவ பயிற்சிக்கும் இப்படி விளையாட்டு பயிற்சிகளுக்கும் அனுப்பி வைத்து தமிழர்களை மத்திய அரசு அவமதித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் மேற்கொண்டிருக்கும் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கையானது மத்திய அரசின் வஞ்சகங்களால் வெந்து கிடந்த நெஞ்சங்களுக்கு ஆறுதலான மருந்தாகும். ஏற்கெனவே தூக்குக் கொட்டடியில் நிற்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக மக்களின் உணர்வுகளை இந்திய அரசுக்கு உணர்த்தியவர் தமிழக முதலமைச்சர் .
இதேபோல் தமிழக மீனவர்கள் பிரச்சனைக்குத் தீர்வான கச்சத்தீவு மீட்பு, காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு உரிமை மீட்பு போன்ற தமிழகம் நலன்சார்ந்த விவகாரங்களில் மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழர் நலனுக்காக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போற்றுதலுக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய தமிழர் நலன்சார்ந்த விவகாரங்களில் தமிழக முதலமைச்சர் மேற்கொள்ளும் அனைத்துவித நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றென்றும் உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment