சோனியா காந்தியின் மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி எம்.பி. மத்திய மந்திரி சபையில் சேர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஏற்கனவே கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மந்திரிசபையில் சேருமாறு ராகுல் காந்திக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும் ஏற்கனவே அழைப்பு விடுத்து இருந்தார். இப்போது அவர் மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளார்.
ஈரானில் இருந்து நேற்று டெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் தன்னுடன் வந்த நிருபர்களுக்கு மன்மோகன் சிங் பேட்டி அளித்தார். அப்போது ஒரு நிருபர், ஆட்சியிலும் கட்சியிலும் இளம் காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய பங்கு வகிக்கும் சூழ்நிலை உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் பங்கு குறித்து என்ன கருதுகிறீர்கள்?கேட்டார்.
அதற்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில்; ராகுல் காந்தியின் பங்களிப்பு மிகவும் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று கருதும் நான் அவர் மத்திய மந்திரிசபையில் சேர வேண்டும் என்றும் விரும்புகிறேன் என்றார்.
ராகுல் காந்தி மந்திரிசபையில் சேரும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டதற்கு; அவர் மனதில் என்ன திட்டம் இருக்கிறது என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் அளித்தார்.
மந்திரிசபை மாற்றம் எப்போது இருக்கும்? என்று கேட்டதற்கு; மாற்றம் இருக்கும்போது உங்களுக்கு தெரியவரும் என்றார்.
அசாம் கலவரத்தை தொடர்ந்து இணையதளங்களில் வெளியான போலி வீடியோ காட்சிகளால் வதந்தி பரவியது பற்றிய கேள்விக்கு மன்மோகன் சிங் பதில் அளிக்கையில் இதுபோன்ற இணையதள குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க உரிய கொள்கையை வகுப்பது பற்றிய சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை தான் கேட்டுக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து மன்மோகன் சிங் கூறியதாவது:-
9 சதவீத வளர்ச்சியை எட்ட நாம் தீவிரமாக முயற்சிக்கிறோம். ஆனால் இதற்கு சர்வதேச அளவிலான சூழல்கள் உகந்ததாக இல்லை. மேலும் உள்நாட்டிலும் அரசியல் கட்சிகளிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால் சூழ்நிலை சாதகமாக இல்லை. அதிர்ஷ்டவசமாக உள்நாட்டு சேமிப்பும் முதலீட்டு விகிதாச்சாரம் அதிகமாக உள்ளதால் ரெயில்வே, தொலைத்தொடர்பு, சாலைகள் அமைத்தல் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதில் நமது வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பெரிதும் உதவியாக இருக்கிறது. லோக்பால் சட்ட விசாரணை வரம்புக்குள் பிரதமர் பதவியையும் கொண்டு வரவேண்டும் என்று நான் ஏற்கனவே பலமுறை கூறி வந்துள்ளேன். இப்போதும் அதையே கூறுகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்றாலும் இந்த பிரச்சினை பாராளுமன்ற தேர்வுக்குழுவின் முன் உள்ளது.மசோதா பாராளுமன்றத்தில் உள்ளது. இதில் என்ன முடிவு ஏற்பட்டாலும் அதை மதித்து நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
டெக்ரானில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரியை சந்தித்து பேசிய போது இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், மும்பை தாக்குதல் குற்றவாளிகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கையையும் நல்லுறவைவும் மேம்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்.
சர்தாரியின் அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு செல்வதில் நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அதற்கான உகந்த சூழ்நிலை உருவாக வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
No comments:
Post a Comment