ஈசன் படத்தில் இடம்பெற்ற ஜில்லா விட்டு ஜில்லா வந்த என் கதையை கேளுயா... என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது. பாலியல் தொழில் செய்யும் பெண்களின் பரிதாப வாழ்க்கையை நறுக்கென்று சொல்லியிருக்கும் அந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் இளம் பாடலாசிரியர் மோகன்ராஜ். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேய்க்கல் நாயக்கன்பட்டியை சேர்ந்த இவருக்கு சின்ன வயதில் இருந்தே பாடல் எழுதுவதில் ஆர்வம் அதிகம். நண்பர்களின் உந்துதலால் பாட்டெழுத சென்னை புறப்பட்டு, பின்னர் கிட்டத்தட்ட ஏழெட்டு ஆண்டு காலம் சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத துறைகளில் பணியாற்றி, விடா முயற்சியுடன் திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார்.
ஈசன் படத்தில் தனது பாடல் இடம்பெற்றது குறித்து மோகன்ராஜ் கூறுகையில், ஜேம்ஸ்வசந்தன் சார் இசையமைப்பில் உருவாகவிருந்த வெட்டாட்டம் படத்திற்காக எழுதப்பட்ட பாடல்தான் ஜில்லா பாடல். சில காரணங்களால் ஜேம்ஸ் அந்த படத்தில் இருந்து விலக, அந்த பாட்டு பயன்படுத்தப்படவே இல்ல. ஒருமுறை ஜேம்ஸ் வசந்தன், இயக்குனர் சசிகுமாருக்கு இந்த பாடலை போட்டுக் காட்டியிருக்கார். சசிகுமாருக்கு பாட்டு ரொம்பவே பிடிச்சிடுச்சசு. அதை ஈசன் படத்துல மிகச் சில திருத்தங்களோட இடம்பெற வச்சார். பாடல் வரிகளோடு இசையும், நடனமும், குரலும் சேர்ந்து அந்த பாட்டை எங்கேயோ கொண்டு போயிடுச்சு, என்றார்.
அடுத்தடுத்த பாடல் வரிகளுடன், புதிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் மோகன்ராஜூக்கு முன்னணி பாடலாசிரியர்கள் வரிசையில் இணைய வேண்டும் என்பதுதான் ஆசையாம். சின்ன வயசுக் கனவு கண்டிப்பாக பலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்!

No comments:
Post a Comment