கரூர் அருகேயுள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் பத்மதேவி. இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பசுபதி பாளையம் போலீசார் வழக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
வீடு திரும்பிய அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதை தொடர்ந்து அவரது தாயார் பத்மாவதி போலீசில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் பத்மாவதி வழக்கு தொடர்ந்தார்.
அதில், விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் எனது மகளை மானபங்கம் செய்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவள் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறாள். இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர்.
எனவே, நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார். அதையடுத்து சிகிச்சை பெற்று வந்த பத்மதேவியிடம் மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார்.
அப்போது, விசாரணைக்கு அழைத்து சென்ற தன்னை 3 போலீசார் மானபங்கம் செய்ததாகவும், இதனால் அவமானம் அடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, வாக்குமூலம் அளித்த சில நாட்களில் பத்மதேவி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து பத்மதேவி வாக்குமூலத்தின் அடிப்படையில் தவறு செய்த போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில் தாயார் பத்மாவதி மீண்டும் மனு செய்தார்.
இந்த மனு நீதிபதி சத்திய நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், பத்மதேவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment