நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ள, "பயணம் படம் வெளிவர, அவரது முன்னாள் மனைவி லலிதா குமாரி உதவியுள்ளார். அவர் பெயரில் உள்ள சொத்தை உத்தரவாதமாக அளித்துள்ளார்; இதனால், "பயணம் படத்தை வெளியிட ஐகோர்ட் அனுமதித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த மகேந்திரகுமார் ஜெயின் என்பவர், நடிகர் பிரகாஷ் ராஜ், அவரது முன்னாள் மனைவி லலிதா குமாரிக்கு எதிராக தாக்கல் செய்த மனு: என்னிடம் இருந்து நடிகர் பிரகாஷ்ராஜ் கடன் பெற்றார். அதற்கான ஆவணங்களை அளித்துள்ளார். 2008ல், பிரகாஷ்ராஜ் ஒரு உத்தரவாதம் அளித்திருந்தார். அதில், எனக்குரிய கடனை தராமல், "அபியும் நானும் படத்தின் உரிமைகளை யாருக்கும் தர மாட்டேன் என கூறியிருந்தார். உத்தரவாதத்தை மீறி படத்தை வெளியிட்டார். இதில், கணிசமாக லாபம் பெற்றார். ஆனால், என்னிடம் பெற்ற கடனை திருப்பித் தரவில்லை.
தற்போது, "பயணம் எனும் படத்தை தயாரிக்கிறார்; இதில், நாகார்ஜுனா நடிக்கிறார். ராதாமோகன் இயக்குகிறார். பணம் தருமாறு கேட்ட போது, மீண்டும் அவர் உத்தரவாதம் அளித்தார்; இன்னும் பணத்தை தரவில்லை. "பயணம் படத்தின் பதிப்புரிமை, நெகட்டிவ் உரிமைகளை வேறு நபர்களுக்கு வழங்க முயற்சிக்கிறார். எனக்குரிய பணத்தை தராமல், படத்தை வெளியிடக் கூடாது என நோட்டீஸ் அனுப்பினேன். 79 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு உத்தரவாதம் அளிக்க பிரகாஷ்ராஜுக்கு உத்தரவிட வேண்டும். "பயணம் படத்தின் பதிப்புரிமை, நெகட்டிவ் உரிமையை கையாள அவருக்கு தடை விதிக்க வேண்டும். படத்தின் பிரின்ட்களை அளிக்க, ஜெமினி கலர் லேபரட்டரிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனுவை நீதிபதி ராமசுப்ரமணியன் கடந்த 8ம் தேதி விசாரித்தார். படத்தின் பிரின்ட்களை வாங்குவதற்கு முன், ஜெமினி கலர் லேபரட்டரிக்கு, 50 லட்சம் ரூபாய் வழங்க பிரகாஷ்ராஜுக்கு நீதிபதி உத்தரவிட்டார். திருக்கழுகுன்றம் அருகில், வடகம்பாடி கிராமத்தில் உள்ள சொத்தை முடக்கி வைக்க மனுதாரர் தரப்பில் கோரியதை, நீதிபதி முதலில் ஏற்கவில்லை. இந்த சொத்து, லலிதாகுமாரிக்கு சொந்தமானது; பிரகாஷ்ராஜ், லலிதாகுமாரி இருவரும் விவாகரத்து பெற்று விட்டதால், இந்த சொத்து உத்தரவாதத்தை ஏற்க முடியாது; மேலும், லலிதாகுமாரி தரப்பில் வக்கீல் ஆஜராகவில்லை என, நீதிபதி கூறியிருந்தார். இவ்வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரகாஷ்ராஜ் தரப்பில் ஆஜரான வக்கீல், லலிதாகுமாரி தரப்பில் சொத்து உத்தரவாதம் அளிக்க விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு: நடிகர் பிரகாஷ்ராஜ் தரப்பில் உத்தரவாதம் அளித்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வங்கி உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளார். சொத்து உத்தரவாதம் அளிப்பதாக லலிதாகுமாரி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருதரப்பிலும் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின்படி, படம் வெளியிட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment