பிரஜா ராஜ்ஜியம் என்றால் மக்கள் ஜனநாயகம் என்று அர்த்தம். சிரஞ்சீவியின் கட்சி இப்போது பிரஜா பூஜ்ஜியமாகி விட்டதுதான் வேடிக்கை! திருப்பதியில் துவங்கப்பட்ட இந்த கட்சி, தன்னை நம்பி வந்த ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் லட்டு கொடுப்பதற்கு பதிலாக மொட்டை போட்டதுதான் இந்த வருடத்தின் லோ லைட் சமாச்சாரம்!
சிரஞ்சீவிக்கு ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேருடைய நம்பிக்கையிலும் பட்டை நாமம் சார்த்தியிருக்கிறார் சிரஞ்சீவி. பெரும் நம்பிக்கையோடு துவங்கிய தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரசோடு இணைத்துவிட்டார். அவரது முடிவு நட்சத்திரங்களை நம்பி களத்தில் இறங்குகிறவர்களுக்கு கவலை அளித்திருப்பது மட்டும் நிஜம்.
இந்த விஷயத்தில் தமிழகம் எப்போதுமே பெட்டர்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சி துவங்கிய போது வெறும் விசிலடிச்சான் குஞ்சுகள் என்றுதான் விமர்சிக்கப்பட்டார்கள் அவரது தொண்டர்கள். ஆனால் கோட்டையை பிடிக்கிற அளவுக்கு வளர்ந்தார் அவர். அவரளவுக்கு செல்வாக்கு இல்லாவிட்டாலும் பெயரளவுக்கு கட்சி ஆரம்பித்த பாக்யராஜ், ராஜேந்தர்கள் கூட தேசிய கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளாதது சின்ன ஆறுதல்.
கருப்பு எம்ஜிஆர் என்று வர்ணிக்கப்படும் விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம், பாதியிலேயே அபார்ஷன் ஆகிவிடும் என்றெல்லாம் கணிக்கப்பட்டது. ஆனால் அதையெல்லாம் மீறி தீர்மானிக்கும் சக்தியாக அவர் விளங்குவதையும் கவனிக்க வேண்டும்.
அமிதாப்பச்சன், சஞ்சய்தத் என்று பாலிவுட்டிலும் அரசியல் பாலுக்கு ஆசைப்பட்ட பூனைகள் ஏராளம்.

No comments:
Post a Comment