தூங்கா நகரம் படத்தில் நடித்திருக்கும் வில்லனை பார்க்கும் ரசிகர்களுக்கு பெரியஆச்சர்யம் காத்திருக்கும். அவர் சாந்தமே உருவான சிதம்பரம் செட்டியார். கோடம்பாக்கத்தில் மையம் கொண்டு அந்த கலர் நகரத்தை கலகலப்பாக்கிக் கொண்டிக்கும் கமலா தியேட்டரின் அதிபர்.
நடிகர் திலகத்தின் நண்பர், இந்திரா காந்தியை அறிந்தவர் என்று பல்வேறு பெருமைகள் கொண்டவரை ஒரு வில்லனாக மக்கள் பார்த்தது எப்படி? அது பெரிய பின்னணி சார் என்றபடி பேச ஆரம்பித்தார் பெரியவர்.
நான் சிவாஜி சாரோட அவ்வளவு நெருக்கமாக இருந்த காலத்திலேயே நடிக்க ஆசைப்படலே. அவ்வளவு ஏன்? நான் நினைச்சிருந்ந்தா அவரை வச்சு படம் கூட எடுத்திருப்பேன். ஆனால் எங்க நட்பு பிரிஞ்சுரக் கூடாதுன்னு அந்த வேலையை செய்யல. இடையில் ஷங்கர் சார் என்னை நடிக்க கூப்பிட்டாருன்னு வந்த செய்திகளில் கூட உண்மையில்லை. ஆனால் நடிக்க அழைத்தவர்கள் நிறைய பேர் இருந்தாங்க. எப்பவுமே நான் அதுக்கு ஆசைப்பட்டதில்ல.
து£ங்கா நகரம் படத்தின் டைரக்டர் கௌரவோட அப்பாவும் நானும் நண்பர்கள். இந்த கேரக்டர்ல நான்தான் நடிக்கணும்னு தம்பி ஒத்த காலில் நின்னாரு. முதல்ல முழு கதையையும் கேட்டேன். என்னுடைய இமேஜுக்கு எந்த இழுக்கும் வராத மாதிரி எடுப்பாருன்னு புரிஞ்சுது. அப்புறம்தான் நடிக்கப் போனேன். சுமார் 15 நாட்கள் என்னை வச்சு ஷ§ட்டிங் எடுத்தாங்க. படத்தில் வர்ற பதினைஞ்சு நிமிஷத்துல நான் டயலாக் பேசுற காட்சிகள் இரண்டு நிமிஷம் வந்தால் ஆச்சர்யம். இப்படி நடங்க. அப்படி உட்காருங்க. இப்படி பாருங்க என்று அவர் சொல்ல சொல்ல அப்படியே செஞ்சேன். படத்தை பார்த்துட்டு மற்றவங்கதான் சொல்லணும்.
படத்தை பார்த்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஆ...ஊ...ன்னு ஆர்ப்பாட்டம் இல்லாம அமைதியா இயல்பா நடிச்சிருக்கீங்க என்று பாராட்டினார். திரையுலகத்தை சேர்ந்த இன்னும் நிறைய பேர் பாராட்டுறாங்க.
இவ்வளவு பேர் பாராட்டினாலும், என் மனைவியை இந்த படத்தை பார்க்க நான் அனுமதிக்கல. அவங்க படம் பார்க்கணும்னு சொன்னப்ப, கடைசியா என்னை கத்தியால குத்திடுவாங்க. பரவாயில்லையான்னு கேட்டேன். அந்த மாதிரி படத்தில எதுக்கு நடிக்கிறீங்கன்னு வருத்தப்பட்டாங்க. அதனாலேயே நான் படத்துக்கு போகலைன்னு சொல்லிட்டாங்க... சொல்லி விட்டு குழந்தை போல சிரித்தார் செட்டியார்.
தொடர்ந்து படங்களில் நடிக்கிற எண்ணம் இருக்கிறதாம். நல்ல கதை வைத்திருக்கிற இயக்குனர்கள்(மட்டும்) கமலா தியேட்டர் பக்கம் போகலாம்.

No comments:
Post a Comment