நடிகர் விக்ரம்- அமலா பால் நடிக்கும் புதிய படம் தெய்வமகன். இப்படத்தை மதராசாபட்டிணம் படத்தை இயக்கிய விஜய் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஊட்டி மார்க்கெட்டில் நேற்று நடந்தது.
விக்ரம்-அமலாபால் குழந்தையுடன் வந்து காய்கறி வாங்குவதுபோல் காட்சி படமாக்கப்பட்டது. இதையொட்டி மார்க்கெட் பகுதியில் அதிக கெடுபிடி இருந்தது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் மார்க்கெட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். படப்பிடிப்பு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஊட்டி சினிமா படப்பிடிப்பு மேலாளர் மைக்கிள் கூறும்போது, ஊட்டி மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சிக்கு ரூ.3500 செலுத்தி அனுமதி பெற்று இருக்கிறோம்.
மேலும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்திற்கும் பணம் கொடுத்துள்ளோம் என்றார். அதனால் வியாபாரிகள் இதை ஏற்கவில்லை. இதையடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஊட்டி நகராட்சி கமிஷனர் குமார் கூறியதாவது:-
சினிமா படப்பிடிப்பு நடத்துபவர்கள் ரூ.3500 செலுத்தி நகராட்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதி என்று தெரிவித்து விட்டு, மார்க்கெட் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதால் பிரச்சினை எழுந்து உள்ளது. இனி ஊட்டி நகரில் நகராட்சி பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடத்தினால் போலீசாரின் தடை இல்லா சான்று பெற வேண்டும்.
சினிமா படப்பிடிப்பு நடத்துபவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், தொந்தரவு இல்லாமலும் நடத்த வேண்டும். எந்த இடத்தில் எடுக்கிறோம் என்பதை அந்த ஒப்பந்தத்தில் தெரிவித்தால் மட்டுமே படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே காலையில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பு காரணமாக பொதுமக்கள் சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment