ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் வற்புறுத்துகின்றனர். சில ரசிகர்கள் தன்னிச்சையாக கட்சி பெயரை அறிவித்தனர். கொடியையும் அறிமுகம் செய்தனர். அவர்களை ரசிகர் மன்ற தலைவர் மூலம் ரஜினி கண்டித்தார்.
அரசியலில் ஈடுபடுவது ஆண்டவன் கையில் இருக்கிறது என்று தெளிவுபடுத்தினார். எற்கனவே தி.மு.க.-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்கு சட்டமன்ற தேர்தலில் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு தனது நிலையை மாற்றி பாரதீய ஜனதா-அ.தி.மு.க. கூட்டணியையும் ஆதரித்தார். தற்போது எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமல் மவுனமாய் இருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் ரஜினி ஆதரவுயாருக்கு என்று ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்க்கின்றனர்.
அவரிடம் இருந்து தகவல் வந்த பிறகு சுட்டிக்காட்டும் கட்சிக்கு தேர்தல் பணிகள் செய்ய தயாராக காத்து இருக்கின்றனர். இதற்கிடையில் டெல்லியில் நேற்று என்.டி. டி.வி. நடத்திய சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் ரஜினி பங்கேற்றார். அவருக்கும் விருது வழங்கப்பட்டது.
விழாவில் ரஜினியிடம் சினிமாவில் நிறைய சாதித்து விட்டீர்கள். அடுத்த கட்டமாக எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் அரசியலில் ஈடுபடுவீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து ரஜினி கூறும்போது:-
அரசியல் பற்றி கருத்து எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை என்றார். விருது பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான கடவுளுக்கும் திரைப்படத் துறையினருக்கும் நன்றி என்று கூறினார்.
விழாவில் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு ரஜினியின் அரசியல் செல்வாக்கு பற்றி பேசினார். அவர் கூறும்போது:-
1996-ல் ரஜினி அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உருவானது. ஆனால் அவர் வரவில்லை. அப்போது அரசியலுக்கு வந்து இருந்தால் சுலபமாக ஜெயித்து இருப்பார். அந்த அளவு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. அரசியலுக்கு வர அவர் தயங்குவதால் வரமாட்டார் என்று அர்த்தம் கிடையாது என்றார்.

No comments:
Post a Comment