தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவில் ஏராளமான குளறுபடிகள் நடப்பதாக ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து அவ்வப்போது அதிரடி சோதனை நடத்தி முறைகேட்டை தடுத்தனர். அதன்பிறகும் தட்கல் முன்பதிவு முறைகேடு முற்றிலுமாக தடுக்கப்படவில்லை.
டிராவல் ஏஜெண்டுகளின் ஆதிக்கம் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து சி.பி.ஐ. போலீசார் ரெயில் நிலையங்களிலும், ஓடும் ரெயில்களிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல டிராவல் ஏஜெண்டுகள் பிடிபட்டனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தப்பிரச்சினை பற்றி பலகோணங்களில் ஆய்வு மேற்கொண்ட ரெயில்வே நிர்வாகம், புதிய முறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, தட்கல் ரெயில் எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
முன்பெல்லாம் பயண தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவே தட்கல் முன்பதிவு டிக்கெட் கொடுக்கப்பட்டது. பின்னர், ஒரு நாளைக்கு முன்பு தட்கல் டிக்கெட் தரப்பட்டது. இப்போதும் அதுதான் நடைமுறையில் உள்ளது. முறைகேடுகளைத் தடுப்பதற்காக தட்கல் பதிவுக்கான நேரத்தை ரெயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ரெயில் முன்பதிவு மையங்களில், இதுவரை தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்குத்தான் தட்கல் முன்பதிவு தொடங்கும். ஐ.ஆர்.சி.டி.சி., ரெயில் டிராவல் சர்வீஸ் ஏஜெண்டுகள் (ஆர்.டி.எஸ்.ஏ.) உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து டிராவல் ஏஜெண்டுகளும் 12 மணி வரை தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது.
ஒரு ரெயில் புறப்படுவதற்கு 120 நாட்களுக்கு முன்பு (4 மாதங்களுக்கு) ரெயில் முன்பதிவு டிக்கெட் எடுக்கலாம். இதனை ஓபனிங் டே என்று சொல்வார்கள். இந்த நாளில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை ஏஜெண்டுகள் முன்பதிவு டிக்கெட் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடை இப்போதும் நீடிக்கிறது.
ரெயில் முன்பதிவு மையங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கவுண்ட்டர்கள் இருந்தால், அங்கு தட்கல் முன்பதிவுக்காக தனியாக கவுண்ட்டர்கள் காலை 10 மணி முதல் காலை 11 மணி வரை செயல்படும். தட்கல் முன்பதிவுக்காக தனி வரிசையும் உருவாக்கப்படும். ரெயில் முன்பதிவு மையத்தில் ஒரேஒரு கவுண்ட்டர் இருந்தால் தட்கல் விண்ணப்பங்கள் காலை 11 மணி வரை முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்கப்படும். அந்த நேரத்தில் தனி வரிசையும் உருவாக்கப்படும்.
ஒருங்கிணைந்த ரெயில் முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கப்படும் மையங்களைப் பொருத்தவரை, காலை 10 மணிக்கு தட்கல் முன்பதிவு தொடங்கும். குறிப்பிட்ட ரெயில் நிலையத்திற்கு காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை 1/2 மணி நேரத்திற்குள் வந்து செல்லும் ரெயில்களுக்கான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கப்பட்ட பிறகு, தட்கல் டிக்கெட்டுகள் கொடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய முறையின்படி, சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் (மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ்) முதல் தளத்தில் உள்ள ரெயில் டிக்கெட் முன்பதிவு மையத்தில், தட்கல் டிக்கெட் கொடுப்பதற்காக 11 கவுண்ட்டர்கள் திறக்கப்படுகின்றன.
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 5 கவுண்ட்டர்களும், கடற்கரை ரெயில் நிலையத்தில் ஒரு கவுண்ட்டரும் திறக்கப்படுகிறது. மற்ற முன்பதிவு மையங்களில் ஒரு கவுண்ட்டர் திறந்திருக்கும்.
தட்கல் கவுண்ட்டர்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். அதன்பிறகு பொதுடிக்கெட்டுக்கான முன்பதிவு வழக்கம்போல் நடைபெறும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:
Post a Comment