சச்சின் டெண்டுல்கரின் சாதனை மகத்தானவை என்றாலும் அவை என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது,
எங்கள் காலத்தில் சுனில் கவாஸ்கரின் 34 சதம் சாதனையை யாரும் முறியடிக்க முடியாது என்று நினைத்தோம். ஆனால் சச்சின் அதனை முறியடித்தார். சச்சினின் 100 சதங்கள் சாதனை மகத்தானது. ஆனால் அந்த சாதனை என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படும்.
சச்சின் சாதனை முறியடிக்கப்படாவிட்டால் மனித குலம் பின்தங்கிவிடும். என்றாவது ஒருநாள் இந்த சாதனையை யாராவது முறியடிப்பார் என்று காத்திருக்க வேண்டும். சாதனை என்பதே முறியடிப்பதற்காகதான். ஆகவே சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்கக் கூடியதுதான். அது நடக்காவிட்டால் மனித இனம் நீடிப்பதற்கான அர்த்தமே இல்லை.
நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சமயத்தில் டெண்டுல்கரும், வினோத் காம்பிளியும் வெளிச்சத்திற்கு வந்தார்கள். இவர்களில் டெண்டுல்கர் ஒரு முன்மாதிரி வீரராக பரிணமித்துவிட்டார். ஆனால், வினோத் காம்பிளியிடம் சரியான திட்டம் இல்லை. அதனால் அவர் தோல்வி அடைந்தார்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கபில்தேவ் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment