அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தில் போடோ இன இளைஞர்கள் சிலர் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, போடோ இன மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே மதக்கலவரம் மூண்டது.
கொலை, தீவைப்பு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியது. கலவரத்துக்கு பயந்து கிராம மக்கள் ஊரை காலி செய்து விட்டு, முகாம்களில் தஞ்சம் புகுந்து விடுகின்றனர்.
கோக்ரஜார், சிராக் மற்றும் வங்காளதேசம் எல்லையில் உள்ள துப்ரி ஆகிய 3 மாவட்டங்களில் பயங்கர கலவரம் நடக்கிறது. 60 கிராமங்களில் வீடுகள் அனைத்தும் தீவைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன.
கலவரத்தை அடக்க 3 மாவட்டங்களிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. போலீசாருடன் இணைந்து ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்த கலவரத்துக்கு இதுவரை 32 பேர் பலியாகி உள்ளனர். இரு தரப்பினர் மோதலில் 28 பேரும், போலீஸ் துப்பாக்கி சூட்டில் 4 பேரும் இறந்தனர்.
மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களில்தான் கலவரம் நடக்கிறது. இதனால், போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உடனடியாக சென்று கலவரத்தை அடக்க முடியவில்லை என்று மாவட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் அசாம் முதல்- மந்திரி தருண் கோகாயை தொடர்பு கொண்டு நிலவரத்தை கேட்டறிந்தனர். கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
கலவரத்தால் கவலை அடைந்துள்ள முதல்-மந்திரி தருண் கோகாய், உள்துறை மந்திரி ப.சிதம்பரம், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆகியோரை தொடர்பு கொண்டு, கூடுதல் பாதுகாப்பு படை மற்றும் ராணுவ வீரர்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, அங்கு கூடுதலாக பாதுகாப்பு படையினரும், ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. பல இடங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு இருக்கிறது.
No comments:
Post a Comment