பிரணாப் முகர்ஜிக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை இன்று வெளியிடுவதாக அன்னா ஹசாரே குழுவினர் தெரிவி்த்துள்ளனர். அவர்கள் என்ன ஆதாரங்களை வெளியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரணாப் முகர்ஜி நாட்டின் 13வது குடியரசுத் தலைவராக இன்று காலை 11.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக அவருக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை இன்று வெளியிடப் போவதாக அன்னா குழு உறுப்பினர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். ஊழலுக்கு எதிராக அன்னா குழுவினர் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
உண்ணாவிரதம் துவங்கியவுடன் பிரணாபுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வெளியிட அன்னா குழுவினர் திட்டமிட்டனர். அன்னா ஹசாரே இன்று காலை 9 மணிக்கு ராஜ்காட் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஜந்தர் மந்தருக்கு வந்து உண்ணாவிரதத்தை துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பு பிரணாப் முகர்ஜி இன்று காலை ராஜ்காட் சென்றதால் அன்னாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அதனால் அன்னா 9 மணிக்கு பதில் 11.45 மணிக்கு ராஜ்காட் சென்றார். அதன் பிறகு அவர் ஜந்தர் மந்தருக்கு வந்து உண்ணாவிரதத்தை துவக்கி வைத்தார். ஆனால் இன்னும் அவர்கள் பிரணாபுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை வெளியிடவில்லை.
இன்று அன்னா உண்ணாவிரதம் இருக்க மாட்டார். ஆனால் மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளை இன்றில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் நிறைவேற்றாவிட்டால் ஞாயிற்றுக்கிழமை முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவிருக்கிறார்.
ஏற்கனவே மத்திய அரசு எதிர்கட்சிகளால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கையில் அன்னா குழுவினர் பிரணாபுக்கு எதிராக என்ன ஆதாரங்களை வெளியிடப் போகிறார்களோ என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment