மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் முக்கிய அங்கம் வகிக்கிறது. மூத்த தலைவரான அவர் வேளாண்மை துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் அவரது கட்சி மராட்டிய மாநில காங்கிரஸ் கூட்டணி அரசியலும் அங்கம் வகிக்கிறது. சரத்பவாரின் மருமகன் அஜித் பவார் மாநில நீர்ப் பாசன மந்திரியாகவும் அவரது கட்சி சார்பில் சில மந்திரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசுக்கு இதுவரை எந்த நெருக்கடியும் கொடுக்காத சரத்பவார் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் திடீர் போர்க்கொடி உயர்த்தினார். பிரதமர் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தை அவரும், அவரது கட்சியை சேர்ந்த இன்னொரு மத்திய மந்திரியான பிரபுல் படேலும் புறக்கணித்தனர். இது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய மந்திரி சபையில் பிரணாப் முகர்ஜி வகித்த 2-வது இடம் மூத்த மந்திரியான தனக்கு வழங்கப்படும் என்று சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் அந்த இடம் ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணிக்கு வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் அவர் போர்க்கொடி தூக்கினார். சரத்பவாரும், பிரபுல் பட்டேலும் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூட்டணியை விட்டு விலகி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
சரத்பவாரை பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் சமாதானப்படுத்தினார்கள். இதையடுத்து மந்திரி பதவியில் நீடிப்பதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி டெல்லியில் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி முடிவு செய்யும் என்றும் பிரபுல் பட்டேல் அறிவித்தார்.
இதையடுத்து டெல்லியில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன் விவரம் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்பு கமிட்டியை உருவாக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும், கூட்டணி கட்சிகளை ஆலோசித்த பிறகே கவர்னர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். மராட்டிய மாநிலத்திலும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் பழி வாங்கப்படுகிறது. எங்களுக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும். அம்மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானை மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.
48 மணி நேரத்தில் இவற்றை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மந்திரி சபையில் இருந்து வெளியேறுவோம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கெடு விதித்தது.
சரத்பவார் கட்சியின் மிரட்டல் காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சரத்பவாரின் கோரிக்கைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
முக்கிய கூட்டணி கட்சி மந்திரிசபையில் இருந்து வெளியேறுவதை இருவரும் விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து சரத்பவாரை சமாதானப்படுத்துவதற்காக அவரது கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து மராட்டிய முதல்- மந்திரி பிரிதிவிராஜ் சவான் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ளார். அவரை முதல்- மந்திரி பதவியில் இருந்து மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பதில் பதாங்ராவ் கதாம்ப், பாலாசாகிப் தோரட், விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோரில் ஒருவரை முதல் மந்திரியாக்கலாமா? என பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மராட்டிய பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்றும், அதே போல் இதர கோரிக்கைகளை நிறைவேற்றவும் காங்கிரஸ் முன் வந்துள்ளதாக தெரிகிறது.
இதை சரத்பவார் ஏற்று சமாதானம் அடைவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் தரப்பில் இருந்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதாக வாக்குறுதி அளித்ததும் சரத்பவார் தனது முடிவை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. சரத்பவாரின் கெடு நாளை வரை உள்ளது. இதற்குள் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே சரத் பவாரின் திடீர் மிரட்டல் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. மந்திரி சபையில் தனக்கு 2-வது இடம் இல்லை என்ற அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும் தனது உடல் நிலையை காரணம் காட்டி மகள் சுப்ரியாவை மத்திய மந்திரியாக்க திட்டமிட்டுள்ளார். மேலும் நாட்டில் பருவ மழை பொய்த்ததால் அடுத்து வரும் மாதங்கள் வேளாண்மை துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும். வறட்சியால் பாதிக்கப்படும்போது உணவுப் பொருட்கள் விலை ஏற்றம் கடுமையாக இருக்கும். இதற்கு வேளாண்மை துறையே பொறுப்பேற்க வேண்டி வரும். எனவே இதில் இருந்து தப்பிக்க தனது உடல் நிலையை காரணம் காட்டி தப்பிக்க சரத்பவார் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
மராட்டியத்தில் நீர்ப்பாசன மந்திரியாக இருக்கும் சரத்பவார் மருமகன் அஜித் பவார் மீது நீர்ப்பாசன திட்ட ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டுள்ள. இவரது கட்சி மந்திரிகள் மீதும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் வரும் நேரத்தில் தனது கட்சி மீது திட்டமிட்டு ஊழல் புகார் கூறி கெட்ட பெயர் ஏற்படுத்த காங்கிரஸ் சதி செய்வதாக சரத் பவார் கருதுகிறார். இதனால் இதற்கு காரணமான மராட்டிய முதல் மந்திரியை நீக்க கோரிக்கை வைத்துள்ளார்.
மந்திரி சபை கூட்டத்தை புறக்கணித்த சரத்பவார் கடந்த ஒருவாரமாக அலுவலகம் செல்லவில்லை. அரசு காரையும் திருப்பி அனுப்பி விட்டார். பிரதமர் அலுவலகம் கூடுதலாக வேளாண்மை துறையை கவனித்து வருகிறது. எனவே கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றால், சரத்பவார் முடிவில் மாற்றம் ஏற்பட்டு அலுவலகம் திரும்புவார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment