ஜனாதிபதி தேர்தலில் மம்தா பானர்ஜியும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வருகையையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.
சத்தியமூர்த்தி பவன் வண்ண மலர்களாலும், கொடி தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நுழைவுவாயிலில் இருந்த காந்தி, காமராஜர் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. பிரணாப் முகர்ஜியை வரவேற்பதற்காக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முன்னதாகவே வந்து குவிந்திருந்தனர்.
பிரணாப் முகர்ஜி நேற்றிரவு 7.35 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வந்தார். அப்போது அதிர்வேட்டுகள் வெடித்தும், மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் பிரணாப் முகர்ஜிக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், ஜி.கே.வாசன், குலாம் நபி ஆசாத், நாராயணசாமி, முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதைத்தொடர்ந்து பிரணாப் முகர்ஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள எனக்கு ஏற்கனவே பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சிகள் மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் எதிர்வரிசையில் இருக்கும் பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவைதவிர மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.
ஒரு நாட்டின் ஜனாதிபதி என்பவர் அந்த நாட்டின் ஒட்டுமொத்த கவுரவத்தை பிரதிபலிப்பவராக இருக்க வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், நாட்டின் நிர்வாக ரீதியான திட்டங்களை தீட்டுவது, கொள்கைகளை வகுப்பது ஆகியவை ஜனாதிபதியின் அதிகார வரம்பிற்குள் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் பலம்.
இந்தியாவில் சாதி, மதம், மொழி, இனம், கட்சிகள் என்று பன்முகத்தன்மை இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது. அந்த அடிப்படை தத்துவத்தை பிரதிபலிப்பவராக ஜனாதிபதி இருக்கிறார். இந்திய ஜனநாயகத்தின் வலிமை, இத்தனை வேறுபாடுகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமையில்தான் அடங்கியிருக்கிறது. அதுதான் இந்திய ஜனநாயகத்தின் தனித்தன்மை ஆகும். எல்லோரும் பெருமைப்படும் விஷயமும் இதுதான்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
அதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு பிரணாப் முகர்ஜி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: நீங்கள் ஜனாதிபதியாக வந்த பிறகு எதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள்? ராஜீவ்காந்தி கொலையாளிகள் கருணை மனு பற்றி முடிவு எடுக்கப்படுமா?
பதில்: இந்திய ஜனாதிபதிக்கு என்னென்ன அதிகாரம் இருக்கிறது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 53-ல் இருந்து பல்வேறு ஷரத்துகளில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக இருப்பவர் என்ன செய்ய வேண்டும் என்பதை, முன்னாள் ஜனாதிபதிகள் ராஜேந்திர பிரசாத், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஜாகீர் உசேன் மற்றும் அவர்களைத் தொடர்ந்து இருந்த ஜனாதிபதிகள் பல்வேறு விஷயங்களை கையாண்ட விதத்தில் முன்உதாரணங்கள் இருக்கின்றன. அவர்களது வழிகாட்டுதலின்படி நான் செயல்படுவேன்.எனவே, எனக்கென்று ஒரு புதிய இலக்கை வகுத்துக் கொள்ளத் தேவையில்லை.
கேள்வி: தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஜனாதிபதி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக சொல்லியிருக்கிறார்களே? அவர்களிடம் ஆதரவு கோருவீர்களா?
பதில்: அவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சியினரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளரான என்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளேன். திரிணாமூல் காங்கிரஸ் தலைவியும், மேற்கு வங்காள முதல்-அமைச்சருமான மம்தா பானர்ஜி, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அவரும் என்னை ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவரும் என்னை ஆதரிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி பதில் அளித்தார்.
பேட்டிக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் உள்ள அரங்கத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பிரணாப் முகர்ஜி பேசினார். இதில், முன்னாள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment