திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பஸ்நிலையம் அருகே உள்ள சந்தை மைதானத்தில் தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, பொதுமக்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறை கேட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-
மக்களை நம்பி, மக்களுக்காக நடத்தப்படும் கட்சி தே.மு.தி.க. இந்த ஆட்சியில் கல்வியையும், விவசாயத்தையும் ஒழுங்காக வளர்ச்சியடைய செய்யாமல், அதைப்பற்றி முன்கூட்டி திட்டமிடாமல் செயல்படுகிறார்கள். 40 சதவீதம் மாணவர்களுக்கு மட்டும் புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கி இருக்கிறார்கள். மீதி 60 சதவீதம் பேருக்கு புத்தகம் மற்றும் எந்தப்பொருளும் வழங்காமலும் உள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ்உள்ள மக்கள் வாடி வதைகின்றனரே தவிர வளர்ந்தபாடில்லை. தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் மக்கள் அல்லல்படவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஓரளவு அனுமதிபெற்று, அதைவிட பன்மடங்கு அதிகமாக மணல் ஏற்றி கொள்ளை அடித்து தமிழக மக்களின் பணத்தை தண்ணீராக உறிஞ்சுகிறார்கள். 2014-ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியை படைப்போம். அப்போது கூட்டணியில் யார் இருந்தால் வெற்றி, யாரால் வெற்றி என்பதை பார்ப்போம். அந்த வெற்றியை தடுக்க விஜயகாந்தை ஜெயிலுக்கு அனுப்ப திட்டமிடுகிறார்கள். நான் எதற்கும் அஞ்சமாட்டேன்.
தமிழ்நாடு பிழைக்க, நாட்டு மக்கள் முன்னேற வரும் பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள். உங்கள் குறைகளை தீர்த்து வைப்பது என்னுடைய கடமையாகும் மேற்கண்டவாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment