கர்நாடக முதல்-மந்திரி பதவியில் இருந்து சதானந்த கவுடாவை நீக்கிவிட்டு தனது ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்-மந்திரி ஆக்க வேண்டும் என்று எடியூரப்பாவும், அவரது ஆதரவு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் பாரதீய ஜனதா மேலிடத்தை வற்புறுத்தினார்கள்.
இதனால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டதால், சதானந்த கவுடாவை நீக்கிவிட்டு ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்து கட்சி மேலிடம் முடிவு செய்தது. இந்த முடிவை சதானந்த கவுடா ஏற்றுக்கொண்டார்.
ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்-மந்திரியாக தேர்வு செய்வதற்காக பெங்களூரில் நேற்று காலை 11 மணிக்கு பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற இருந்தது. கூட்டம் நடைபெற இருந்த ஓட்டலுக்கு எடியூரப்பா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 65 பேர் வந்தனர். ஆனால் சதானந்த கவுடா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சுமார் 46 பேர் கூட்டத்துக்கு வரவில்லை.
சதானந்த கவுடா திடீரென்று போர்க்கொடி உயர்த்தியதே இதற்கு காரணம். ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் சதானந்த கவுடா தனது இல்லத்தில் தனது ஆதரவு மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் ஈசுவரப்பா, மந்திரிகள் சுரேஷ்குமார், கோவிந்த கார்ஜோள், விசுவேஸ்வர ஹெக்டே காகேரி, நாராயணசாமி, பச்சேகவுடா, பாலச்சந்திர ஜார்கிஹோளி உள்பட சுமார் 45 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சந்திரேகவுடா எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய முதல்-மந்திரியை தேர்ந்து எடுக்கும் முன் கட்சியின் மாநில தலைவர் பதவியை சதானந்த கவுடாவுக்கு வழங்க வேண்டும், துணை முதல்-மந்திரி பதவியை ஈசுவரப்பா மற்றும் மந்திரி அசோக் ஆகியோருக்கு வழங்க வேண்டும், மந்திரிகள் யார்-யார்? என்பதை உடனே அறிவிக்க வேண்டும், மந்திரிசபையில் 50 சதவீத இடங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று அவர்கள் மேலிட பார்வையாளர்களுக்கு நிபந்தனை விதித்தனர். இதனால் ஜெகதீஷ் ஷெட்டரை புதிய முதல்-மந்திரியாக தேர்ந்து எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இது தொடர்பாக ஈசுவரப்பாவும், சதானந்த கவுடாவும் பாரதீய ஜனதா மேலிட தலைவர்கள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, துணை முதல்-மந்திரி பதவியை ஈசுவரப்பா, அசோக் ஆகியோருக்கு வழங்க மேலிட தலைவர்கள் ஒப்புக்கொண்டதாகவும், கட்சியின் மாநில தலைவர் பதவி மற்றும் யார்-யார்? மந்திரிகள் என்ற பட்டியலை விவாதித்துதான் முடிவு அறிவிக்க முடியும் என்று அவர்கள் கூறியதாகவும் தெரிகிறது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சதானந்த கவுடாவின் ஆதரவாளர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வோம் என்று பிடிவாதமாக இருந்தனர். இதனால் திட்டமிட்ட நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவில்லை. பின்னர் மேலிட பார்வையாளர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று சதானந்த கவுடா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சம்மதித்தனர்.
இதனால் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தாமதமாக மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் மேலிட பார்வையாளர் ராஜ்நாத்சிங், அனந்தகுமார், எடியூரப்பா, முதல்-மந்திரி சதானந்த கவுடா, ஈசுவரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் சட்டசபை பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக (முதல்-மந்திரி) ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எடியூரப்பா, ராஜ்நாத் சிங், சதானந்த கவுடா, ஈசுவரப்பா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சதானந்த கவுடா இன்று (புதன்கிழமை) கவர்னர் பரத்வாஜை சந்தித்து முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுக்கிறார். அதன்பிறகு, ஜெகதீஷ் ஷெட்டர் கவர்னரை சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு கோரி கடிதம் கொடுப்பார். இதைத்தொடர்ந்து கவர்னரின் அழைப்பை ஏற்று அவர் நாளை புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment