காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சட்ட மந்திரியுமான சல்மான் குர்ஷித், ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர், காங்கிரஸ் கட்சிக்கு வேர் போன்று அமைந்துள்ள பிரச்சினை, கட்சியின் அடுத்த தலைமுறைத்தலைவரான ராகுல்காந்தியிடம் கட்சியை கொள்கை ரீதியில் சரியாக வழிநடத்த ஏற்ற தலைமை இல்லாததுதான் என கூறி இருந்தார்.
கட்சியின் எதிர்காலத்தலைவர், வருங்கால பிரதமர் வேட்பாளர் என்றெல்லாம் கருதப்பட்டு வருகிற ராகுல்காந்தி மீது சல்மான் குர்ஷித் இப்படி கூறி இருப்பது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கருத்து கூறுகையில்,
கட்சியின் மூத்த மந்திரி ஒருவரே கட்சி இலக்கின்றி செல்கிறது என்று சொன்னால், இந்த நாட்டின் பயணமும் இலக்கின்றி தானே இருக்கும் என்றார்.
இதையடுத்து சல்மான் குர்ஷித், டெல்லியில் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது கட்சி, அரசுக்கு வலுவூட்ட இருக்கிறது. அரசுக்கு அடிப்படை கட்சிதான். கட்சி சில இடங்களில் ஏமாற்றத்தை சந்தித்து இருந்தாலும்கூட, இன்றைக்கு நாம் சந்தித்து கொண்டிருக்கிற சவால்களை எதிர்கொள்வதை உறுதி செய்கிற நிச்சயத்தை கொண்டு இருக்கிறது. அந்தக் கருத்தில்தான், கட்சியின் இளைய மற்றும் புதிய தலைமை முன்னணியில் இருந்து வழி நடத்த வேண்டும். நமது காலத்தில் சந்திக்க வேண்டிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இதை எதிர்மறையாக கருத்தில் கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
எனது கருத்து இப்பொது பிரதிபலிக்கப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கிறபோது, (தலைமை பற்றிய விமர்சனம்) அதை கட்சிக்குள் விவாதித்து இருக்க வேண்டும் என்று உணர்கிறேன். ஒவ்வொருமுறையும் உங்களிடம் பேசுகிறபோது, கூறுகின்றவற்றை ஆக்கப்பூர்வமாக வெளியிடுவதா அல்லது எதிர்மறையான பொருள் தருகிற வகையில் வெளியிடுவதா என்பதில் நீங்கள்தான் (ஊடகங்கள்) முடிவு எடுக்க வேண்டும். எனது கோரிக்கை, வேண்டுகோள் எல்லாமே நான் கூறியவற்றை, தயவுசெய்து ஆக்கப்பூர்வமானதாக கருதி வாசித்து பாருங்கள் என்பதுதான்.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறினார்.

No comments:
Post a Comment