கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறப் போவதாக தென்னாப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் சமீபத்தில் அறிவித்தார். தனது இடது கண்ணில் ஏற்பட்ட தீவிரமான காயம் காரணமாக பவுச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 1000 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்ட இன்னும் சில விக்கெட்டுகளே எஞ்சியுள்ள நிலையில் இங்கிலாந்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது பவுச்சருக்கு இக்காயம் ஏற்பட்டுள்ளது.
பவுச்சரின் ஓய்வு பற்றி ரேடியோவில் பேசிய ஜகாரண்டா ரேடியோ தொகுப்பாளரான மார்ட்டின் பெஸ்டர், 'பவுச்சர் இப்போது தென்னாப்பிரிக்க பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆகலாம்’ என்றார். பெஸ்டரின் இக்கருத்துக்கு அந்நாட்டு பத்திரிகைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 'பவுச்சருக்கு ஏற்பட்டுள்ள காயம் எத்தகையது என்பது தெரியாத நிலையில் பெஸ்டர் இவ்வாறு பேசியிருப்பது உணர்ச்சியற்றது’ என தென்னாப்பிரிக்க பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் கேப்டன் கேதி டொனால்ட்சன் கூறியிருந்தார்.
இந்நிலையில் மார்க் பவுச்சர் பற்றிய தனது கருத்துக்கு பெஸ்டர் நேற்று தனது ரேடியோ நிகழ்ச்சியின்மூலம் மன்னிப்பு கேட்டார். அப்போது, 'நான் கூறிய கருத்து எவ்வளவு மோசமானது என்பதை நான் உணர்ந்துவிட்டேன். பவுச்சர் காயமடைந்த செய்திக்கு நான் தவறான விளக்கம் அளித்துவிட்டேன். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் மிகத் தீவிரமானது என அப்போது எனக்குத் தெரியாது’ என்றார்.
இங்கிலாந்திலிருந்து தற்போது நாடு திரும்பியுள்ள பவுச்சர், காயம் ஏற்பட்ட தனது கண்ணில் பார்வை பெறுவதற்காக தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment