இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் விண்வெளி வீட்டுக்கு செல்ல உள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த, அமெரிக்காவில் வசித்து வரும் தொழில் அதிபர் ஒருவருக்கும், ஸ்லோவேனியா நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் மகளாகப் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ்.
இவர் 1987-ம் ஆண்டு அமெரிக்க கடற்படை அகாடமியில் படித்து பட்டம் பெற்றார். இதையடுத்து இவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து பல முக்கிய பதவிகளை வகித்தார்.
1998-ம் ஆண்டு இவரை விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நாசா தேர்ந்து எடுத்தது. விண்வெளியில் பல்வேறு ஆய்வுக்காக வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு அந்த விண்வெளி வீட்டுக்கு சுனிதா வில்லியம்சை நாசா நிறுவனம் அனுப்பியது. அங்கு 6 மாதம் தங்கி இருந்து சுனிதா பல்வேறு ஆய்வுகளை செய்தார். இதன்மூலம் விண்வெளித் துறையில் 3 முக்கிய சாதனைகளை சுனிதா வில்லியம்ஸ் படைத்தார்.
உலகில் நீண்ட நாட்கள் அதாவது 195 நாட்கள் விமானத்தில் இருந்த பெண் என்ற சாதனையை அவர் ஏற்படுத்தினார். விண்ணில் அதிக தடவை (4) நடந்தவர், அதிக நேரம் (29 மணி நேரம் 17 நிமிடம்) விண்ணில் நடந்தவர் என்ற சாதனைகளையும் சுனிதா படைத்துள்ளார்.
விண்வெளி பயணத்தில் சிறப்பு பெற்ற சுனிதாவை மீண்டும் விண்வெளி வீட்டுக்கு அனுப்ப நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீட்டுக்கு புறப்பட்டு செல்கிறார்.
அவரது விண்கலம் கஜகஸ்தான் நாட்டில் இருந்து நாளை ஏவப்படுகிறது. தற்போது விண்வெளி வீட்டில் ஜப்பான் நாட்டின் அசிசிகோ மற்றும் ரஷியாவின் யூரிமலன் சென்கோ இருவரும் உள்ளனர்.
சுனிதா வில்லியம்ஸ் ஓரிரு நாட்களில் அவர்களுடன் சேர்ந்து கொள்வார். அதன் பிறகு விண்வெளி வீட்டின் கமாண்டர் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்பார். இந்த தடவையும் விண்ணில் நடந்து சுனிதா பல்வேறு ஆய்வுகள் செய்ய திட்டமிட்டுள்ளார். ஆய்வுகள் அனைத்தும் முடிந்ததும் நவம்பர் மாதம் சுனிதா மீண்டும் பூமிக்கு திரும்பி வருவார்.
No comments:
Post a Comment