குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி இளம் எம்.பி.யாக இருக்கையில் அடுத்த பிறவியில் ராஷ்ட்ரபதி பவன் குதிரையாக பிறக்க வேண்டும் என்று கூறியதாக அவரது அக்கா அண்ணபூர்னா தேவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 13வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின்(76) அக்கா அண்ணாபூர்னா தேவி(86) தனது தம்பி குறித்து டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வருமாறு,
பிரணாப் எம்.பி. ஆனபோது டெல்லியில் அவருக்கு கொடுக்கப்பட்ட வீட்டு வராண்டாவில் உட்கார்ந்து நானும், அவரும் டீ குடித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்து ராஷ்ட்ரபதி பவன் நெடுந்தூரம் கிடையாது. இந்த வராண்டாவில் இருந்து பார்த்தால் குடியரசுத் தலைவரின் குதிரைகள் செல்வது தெரியும். குதிரையை கவனிப்பவர்கள் அதற்கு உணவு, தண்ணீர் கொடுப்பதை இங்கிருந்தே பார்க்க முடியும்.
அப்போது பிரணாப் கூறுகையில், அக்கா, அந்த குதிரைகள் எவ்வளவு ஆனந்தமாக உள்ளது என்று பாருங்களேன். அவை வேலை செய்யவே தேவையில்லை. சும்மா சாப்பிட்டுவிட்டு இருக்கின்றன. அதன் முடி எவ்வளவு ஷைனிங்காக இருக்கிறது பாருங்கள். நான் அடுத்த பிறவியில் குடியரசுத் தலைவரின் குதிரையாகத் தான் பிறப்பேன் என்றார்.
இந்த பிறவியிலேயே நீ குடியரசுத் தலைவராவாய். அபப்டி இருக்கையில் எதற்காக மறுபிறவியில் குடியரசுத் தலைவரின் குதிரையாகப் பிறக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். நான் கூறியவாறே எனது தம்பி குடியரசுத் தலைவராகிறார். ஆனால் எனது வயது காரணமாக டெல்லியில் நடக்கும் குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பது வருத்தமாக உள்ளது.
எனது தம்பி குடியரசுத் தலைவர் ஆவதில் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக உள்ளது என்பதை விவரிக்க முடியாது. என் தமபி சிறுவனாக இருக்கையில் சேட்டைகள் அதிகம் செய்வார். என்னை அவருக்காக காத்திருக்கும்படி கூறுவார். நான் காத்திருந்துவிட்டு அவர் வராததால் அந்த இடத்தில் இருந்து நகர்ந்தால் உடனே வந்து எனது முடியைப் பிடித்து இழுத்து உன்னை காத்திருக்கத் தானே கூறினேன் என்பார் என்றார்.
No comments:
Post a Comment