மும்பையின் ஜுகு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மே 20-ந்தேதி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். ஓட்டலில் நடந்த விருந்தில் கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் சப்ளை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் இந்த வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போதை பொருளை உட்கொண்ட பல இளைஞர்களும், அரைகுறை உடையுடன் இளம்பெண்களும் ஆட்டம் போட்டு கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கூத்தும் கும்மாளமுமாக இருந்த 90 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னல் ஆகியோரும் உண்டு. பின்னர் அவர்களிடம் இருந்து சிறுநீர், ரத்தம் மாதிரிகள் எடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம், சிறுநீர் மாதிரிகள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இதற்கிடையே, தாங்கள் போதை பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை, அப்பாவி என்று கிரிக்கெட் வீரர்கள் இருவரும் மறுத்தனர். தான் போதை மருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டால் கிரிக்கெட்டை விட்டே விலக தயார் என்று ராகுல் ஷர்மா சவால் விடுத்தார்.
பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்தமுள்ள 90 பேரில் முதற்கட்டமாக 46 பேரின் பரிசோதனை முடிவின் அறிக்கைகள் கடந்த ஜுன் 22-ந்தேதி வெளியிடப்பட்டன. இதில் 44 பேர் போதை பொருள் பயன்படுத்தி இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் எஞ்சிய 44 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் மும்பை போலீசாருக்கு நேற்று கிடைத்தன.
இதில் 2 பெண்கள் தவிர மற்ற அனைவரும் அதாவது ராகுல் ஷர்மா, வெய்ன் பார்னல் உள்பட 42 பேர் `எக்ஸ்டஸி', கன்னபிஸ் உள்ளிட்ட போதை பொருட்களை உட்கொண்டிருப்பது தெரியவந்துள்ளதாக மும்பை போலீஸ் துணை கமிஷனர் பிரதாப் திகாகர் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்த 42 பேரில் 38 பேர் பெண்கள் ஆவர். போதை மருந்து பயன்படுத்தி இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் இவர்களை கைது செய்வதை தவிர்க்க முடியாது என்றும் போலீசார் குறிப்பிட்டனர்.
25 வயதான ராகுல் ஷர்மா வளர்ந்து வரும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆவார். இந்திய அணிக்காக 3 ஒரு நாள் போட்டியும், இரண்டு 20 ஓவர் போட்டியிலும் விளையாடி இருக்கிறார்.
இன்று தொடங்க உள்ள இலங்கை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார். போதை பொருள் பிரச்சினையில் சிக்கி இருப்பதால் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று தெரிகிறது.
ராகுல் ஷர்மா மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கமாட்டோம், பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசன் நேற்றிரவு தெரிவித்தார். இந்திய அணியின் மேலாளரும், கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் தொடர்பில் உள்ளார். 22 வயதான வெய்ன் பார்னல் தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment