தமிழகத்தில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக ராமேசுவரத்தில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் நடந்து வந்தபோது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜல சந்திப்பகுதியில், ராமபிரானின் வானரப்படையினால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிற, ஆன்மிக சிறப்பு வாய்ந்த ராமர் பாலத்தை தகர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதையடுத்து சேது சமுத்திரத் திட்டப்பணிகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மேலும், சேது சமுத்திரத் திட்டப்பணிகளை மாற்று வழியில் நிறைவேற்றுவது குறித்து ஆராயும்படி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர், வல்லுனர் ஆர்.கே.பச்சவுரி கமிட்டியை மத்திய அரசு அமைத்தது.
அந்தக் கமிட்டி, அனைத்து கோணத்திலும் ஆராய்ந்து மத்திய அரசிடம் தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுவழியில் நிறைவேற்றுவது என்பது, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியில் சாத்தியம் இல்லாதது என திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் இந்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. எனினும், பச்சவுரி கமிட்டியின் அறிக்கை குறித்து மத்திய மந்திரிசபை இனிதான் பரிசீலித்து, முடிவு எடுக்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு சுப்ரீம் கோர்ட் 8 வார அவகாசம் வழங்கி உள்ளது.
இந்தநிலையில், பாரதீய ஜனதா மூத்த தலைவர் வி.கே. மல்கோத்ரா, டெல்லியில் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ராமர் பாலம் என்பது விலை மதிப்பில்லா தேசிய பாரம்பரியச் சின்னம் ஆகும். அதை எந்த விலை கொடுத்தாகிலும் பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல், மாற்றுப்பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்ற ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும். ராமர் பாலத்தை மத்திய அரசு பாதுகாக்க தவறினால், நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் வி.கே. மல்கோத்ரா கூறி உள்ளார்.
No comments:
Post a Comment