நித்தியானந்தாவுக்குத் தைரியம் இருந்தால் உண்மை கண்டறியும் சோதனை, மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர் முன்வர வேண்டும். நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தங்குவோருக்கு சாப்பாட்டில் எதையோ கலந்து மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறார்கள் என்று லெனின் கருப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.
நித்தியானந்தாவின் முன்னாள் ஆதரவாளராக இருந்த லெனின் கருப்பன், ஆர்த்திராவுடன் இணைந்து நித்தியானந்தா குறித்த பரபரப்பு வீடியோ காட்சிகளை வெளியிட்டு அம்பலப்படுத்தியவர் ஆவார். நேற்று இவர் பெங்களூரில் ஸ்பந்தனா அமைப்பின் பொதுச் செயலாளர் வீணாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது லெனின் கருப்பன் பேசியதாவது...
நித்தியானந்தாவையும், அவரது செயல்ககளையும் எதிர்த்தேன் என்ற ஒரே காரணத்திற்காக என் மீது உ.பி, தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மொத்தம் 13 வழக்குகளைப் போட்டுள்ளனர். மேலும் எனக்கு நித்தியானந்தாவிடமிருந்து கொலை மிரட்டலும் தொடர்ந்தபடி உள்ளது. இதுதொடர்பாக நான் தமிழக காவல்துறையில் புகாரும் கொடுத்துள்ளேன்.
நித்தியானந்தா - ரஞ்சிதா இடம் பெற்ற வீடியோ காட்சிகள் உண்மையானவை என்று அமெரிக்காவைச் சேர்ந்த தடயவியல் ஆய்வகம் தெள்ளத் தெளிவாக அறிக்கை கொடுத்துள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த போபத்லால் சல்வா என்பவர் அங்கு தொடர்ந்த வழக்கில், நித்தியானந்தா பவுண்டேஷனுக்கு எதிராக அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அது ஒரு மோசடி நிறுவனம் என்றும் அது அறிவித்துள்ளது.
தொண்டு நிறுவனம் என்ற பெயரில் நித்தியானந்தாவின் சகோதரர்கள் பலகோடி அளவுக்கு பஞ்சலோக சிலைகளை ஏற்றுமதி செய்து மோசடி புரிந்துள்ளனர்.
என்னை கிறிஸ்தவர் என்று பொய்யான பிரசாரத்தை நித்தியானந்தா தரப்பு பரப்புகிறது. ஆனால் நான் ஒரு இந்து, கிறிஸ்தவர் அல்ல.
நித்தியானந்தா ஆசிரமத்தைத் தேடிப் போகும் பக்தர்களை மூளைச் சலவை செய்து தங்கள் பக்கம் திருப்பி விடுகின்றனர். நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் பல கோடி பணத்தை தானமாக கொடுத்துள்ளனர். ஆசிரமத்தில் எதையாவது காட்டி பக்தர்களை அங்கிருந்து போக விடாமல் செய்து விடுகிறார் நித்தியானந்தா.
நித்தியானந்தாவை அம்பலப்படுத்தவும், அந்த ஆசிரமத்தில் நடக்கும் அக்கிரமச் செயல்களை வெளிக் கொண்டு வரவும் எனக்கே பெரும் மன மாற்றம் தேவைப்பட்டது. இதற்காக நான் 17 நாட்களுக்கு அங்கு கொடுக்கப்பட்ட உணவை சாப்பிடவில்லை. இதனால்தான் என்னால் ஒரு நிலையான மன நிலைக்கு வர முடிந்தது. எனவே உணவிலேயே அவர்கள் எதையோ கலந்து ஒருவகையான அடிமை நிலையில் அங்குள்ளவர்களை வைத்திருக்கிறார்கள். உணவுடன் எதையோ கலந்து மயக்க நிலைக்குக் கொண்டு போய் விடுகின்றனர்.
மருத்துவுப் பரிசோதனைக்கு வருமாறு நித்தியானந்தாவுக்கு கர்நாடக சிஐடி போலீஸ் பலமுறை சம்மன் அனுப்பி விட்டது. ஆனால் வர மறுக்கிறார் நித்தியானந்தா. ஏன் இந்த சோதனைகளுக்கு அவர் தயங்க வேண்டும். தைரியம் இருந்தால் அவர் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட மருத்துவ சோதனைகளுக்கு வர வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment