ப.சிதம்பரம் மீண்டும் மத்திய நிதியமைச்சராகப் போவது நிச்சயம் என்பது அவரது பேச்சைப் பார்த்தாலே தெரிகிறது.
வழக்கமாகவே ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு வருமான வரி கட்டுவோரை, குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரை, பிழிந்து எடுப்பது ப.சிதம்பரத்தின் வழக்கம். அதாவது வரி கட்டுவோரை இன்னும் அதிகமாகக் கட்ட வைத்து அதை எடுத்து ஏழைகள் நலனுக்காக செலவிடுவது அவரது ஸ்டைல்.
இதனால் தான் இதுவரை இல்லாத FBT (fringe benefit tax) போன்றவற்றையெல்லாம் கண்டுபிடித்து (ஒரு அலுவலகத்தில் கேண்டீன் இருந்து, அதில் கம்மி விலைக்கு காபி விற்பதால் ஏற்படும் நஷ்டத்துக்குக் கூட அந்த நிறுவனம் வரி கட்ட வேண்டும்) அமலாக்கினார்.
இந் நிலையில் அவரே மீண்டும் நிதியமைச்சராகப் போகிறார் என்கிறார். இதற்கிடையே மத்திய அரசு விவகாரங்கள், பொருளாதாரம் தொடர்பான நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த சிதம்பரம் கூறியதாவது:
விலைவாசி ஏறிவிட்டது, விலைவாசி ஏறிவிட்டது என்று நடுத்தர வர்க்கத்தினர் புலம்புவது சரியல்ல. நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பாட்டில் மினரல் வாட்டரை ரூ. 15 கொடுத்து வாங்குகின்றனர். அவர்களால் ஐஸ்க்ரீமை ரூ. 15 கொடுத்து வாங்க முடிகிறது. இந் நிலையில் விலைவாசி ஏறிவிட்டதாக கூப்பாடு போடுவது ஏன்?.
ஏழை விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு வாங்கும் அரிசி, கோதுமை, கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தியுள்ளோம். இதனால் தான் இவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஆகையால், விலைவாசி உயர்வு என்பது மறைமுகமாக விவசாயிகளுக்கு பலனளித்துள்ளது என்பதே உண்மை.
பெட்ரோல் விலையை ஏற்றிவிட்டோம் என்கிறார்கள். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல் விலையை ஏற்றாமல் இருக்க முடியுமா?. அதே நேரத்தில் சமீபத்தில் கூட 2 முறை பெட்ரோல் விலையைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைத்துள்ளோம்.
ஏழை விவசாயிகளுக்கு உதவுவதால், விலைவாசி உயர்ந்துவிட்டது என்று இனியும் புகார் சொல்லக் கூடாது.
பொருளாதாரத்தை பலப்படுத்த சில கடும் நடவடிக்கைகள் தேவை. முதலில் வெட்டிச் செலவுகளை குறைக்க வேண்டும். சேமிப்பை அதிகரிக்க வேண்டும். அதே போல சேமிப்புகளும் முதலீடுகளும் தொழில்களுக்கும் நிறுவனங்களுக்கும் போக வேண்டும். பணம் தங்கம் போன்றவற்றில் முடங்குவதை தடுக்க வேண்டும். எரிபொருள், நிலக்கரி, இரும்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.
சேமிப்பு, முதலீடுதள், நிதிப் பற்றாக்குறையை குறைப்பது, நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைப்பது. இவை தான் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் 4 முக்கிய விஷயங்கள். இதை செய்ய ஆரம்பித்துவிட்டோம். மீண்டும் விரைவிலேயே வளர்ச்சிப் பாதையை எட்டுவோம் என்றார்.
ப.சிதம்பரம் நிதியமைச்சரானால் தங்கத்தில் முதலீடுகள் அதிகமாவதைக் குறைக்க கடும் நடவடிக்கை வரலாம். கடந்த பட்ஜெட்டிலேயே தங்கத்தின் மீது 4 சதவீத கூடுதல் வரியை பிரணாப் முகர்ஜி போட்டார்.
சிதம்பரம் இன்னும் கடும் நடவடிக்கைகளை எடுக்கலாம்!.

No comments:
Post a Comment