நமிதாவை, நயன்தாராவை, ஹன்சிகாவைத் தெரிந்த நமது இளம் சந்ததியினரில் எத்தனை பேருக்கு லட்சுமி சாகல்லைப் பற்றித் தெரியும்..?
நாம் காலத்துக்கு காலம் 'இந்தியாவின் வீரப் பெண்மணி' என பலரை விளிக்கிறோம். தமிழனுக்கு இப்படியான 'டெரர்' சிந்தனைகள் வருவது சகஜம் என்பதால் அதை பெரியவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த 'இந்தியாவின் வீரப் பெண்மணி' எனும் டைட்டிலுக்கு பலர் போட்டியிட்டாலும், எந்த எதிர்ப்பும் இன்றி இந்தியாவின் சுதந்திர வரலாறு தெரிந்த அனைவராலும் வீரப் பெண்மணி என ஏற்றுக் கொள்ளப்படுபவர் லட்சுமி சாகல். சுருங்கச் சொன்னால் ஜான்சி ராணி, வேலு நாச்சியார் வரிசையில் இந்தியா கண்ட வீரப் பெண்மணி.
பாலக்காட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் லட்சுமி. ஆனால், பிறந்தது கல்வி கற்றது எல்லாமே சென்னையில் தான். மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் MBBS பட்டம் வாங்கியவர், கூடவே பெண் நோயியல் சிகிச்சை நிபுணர் என்கிற சிறப்புத் தகுதி வேறு.
பை நிறைய சம்பளம், நிம்மதியான வாழ்க்கை, ஆசனம் போசனம் சயனம் என்று வாழ்ந்து இருக்கலாம். ஆனால் சாதனையாளர்கள் சாதாரண மனிதர்களில் இருந்து சற்று வித்தியாசமானவர்கள் தானே.. அவரால் சாதாரண மனிதரைப் போல இருக்க முடியவில்லை. அவர் செய்த அர்ப்பணிப்புகளை எல்லாம் சாதனை என்று ஜஸ்ட் லைக் தட் ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவர் செய்தது இந்தியப் பெண்களுக்கே முன்னுதாரணமாக அமைந்தது. ஆம், அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் அமைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவின் முதல் 'படைத் தளபதி' மற்றும் பெண்கள் நலனுக்கான அமைச்சரும் கூட.
இந்திய சுதந்திரம் தனியே மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் அகிம்சை வழியில் மட்டும் பெறப்படவில்லை. அதற்குப் பின்னால் கண்ணீரால், குருதியால், வியர்வையால் எழுதப்பட்ட வீரம் செறிந்த போராட்ட வரலாறு உள்ளது.
வெள்ளைக்காரனுடன் அகிம்சை பேசுவதும் புலியிடம் சென்று புலால் உண்ணாமை பற்றி பேசுவதும் ஒன்று என்பதை பிராக்டிக்கலாகப் புரிந்து கொண்ட இந்தியர்களால் 1942-ல் ஒரு சுப நாளில் சுப முகூர்த்தத்தில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்திய தேசிய ராணுவம். சிங்கப்பூரை பிரித்தானியர்கள், தமது பிரித்தானிய இந்தியப் படையின் உதவியுடன் ஆண்டனர். அப்போது ஆசியாவில் 'அப்பாட்டக்கராக' இருந்த ஜப்பானியப் பேரரசு சிங்கப்பூர் மீது படை எடுக்க விழுந்தது சிங்கப்பூர்; வென்றது ஜப்பான்.
பிரித்தானிய இந்தியப் படையணியில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இருந்த தேசப் பற்று உள்ள இந்தியர்களை உள்ளடக்கி, ஜப்பானியப் பேரரசின் ஆசியுடன் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த இந்திய தேசிய ராணுவம். ஆரம்பத்தில் இந்தப் படையில் போர்க் கைதிகள் மாத்திரமே இருந்தனர். இந்திய தேசிய ராணுவம் சிறிது 'டல்' அடிக்க ஆரம்பித்த வேளையில், அதாவது 1943-ல் நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை தனது இந்திய இடைக்கால அரசின் படைத் துறையாக அறிவித்தார். அத்துடன், அதற்கு தலைமை தாங்கி புத்துயிர் கொடுத்தார். 'நேதாஜி' எனும் ஒற்றை மந்திரத்துக்கு கட்டுப்பட்டு இந்திய தேசிய ராணுவத்தில் மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர் இந்தியர்களும், கூடவே இந்தியாவில் இருந்து சென்ற இந்தியர்களும் இணைந்து கொள்ள, சக்கை போடு போட ஆரம்பித்தது இந்திய தேசிய ராணுவம்.
ஒரு தேசத்தின் சுதந்திரம் என்பது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியம் இல்லை என்பதை உணர்த்து கொண்ட நேதாஜி, இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் 'ஜான்சி ராணி படையணி'யை உருவாக்கினர். அதற்கு படைத் தலைவராக நேதாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகி லட்சுமி சாகல்.
இந்திய தேசிய ராணுவம் ஜப்பானியப் பேரரசின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டு, அவர்களின் ஆசியுடன் தான் களமாடியது. ஆனால், சற்று பிற்போக்கு சிந்தனை கொண்ட ஜப்பானியர்கள் [அந்தக் காலம்] பெண்களாவது போராடுவதாவது எனக் கூறினர். கூடவே, பெண்களுக்கு தனிப்படையணி, தனி போர்த்தளவாடம் என்பது எல்லாம் 'சுத்த வேஸ்ட்' எனக் கருதினர். ஆனால் நேதாஜி இந்தியப் பெண்களுக்கு காதலுக்கு தகுந்த வீரமும் உண்டு என ஆத்மார்த்தமாக நம்பினார். ஜப்பானியப் பேரரசின் விருப்பத்துக்கு மாறாக 'ஜான்சி ராணி படையணி'யை தொடங்கினார். லட்சுமி சாகல் அவருக்கு மிகப் பெரும் நம்பிக்கையாகவும் உறுதுணையாகவும் இருந்தார்.
நேதாஜி பெண்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் பார்த்த கிழக்காசியாவில் வாழ்ந்த புலம் பெயர் இந்தியர்கள் தமது சொத்துகளையும் செல்வங்களையும் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 'ஜான்சி ராணி படையணி'க்கு வழங்கினர். அகிம்சை எல்லாம் வேலைக்கு ஆகாது ஆயுத வழியில் தான் சுதந்திரம் என நம்பிய இந்தியர்களுக்கு நேதாஜி பெரும் நம்பிக்கையாக விளங்கினார்; கூடவே லட்சுமி சாகலும்.
சிங்கப்பூரிலேயே தேர்ந்து எடுக்கப்பட்ட 500 பெண்களைக் கொண்டு லட்சுமி சாகலின் தலைமையில் 'ஜான்சிராணி படையணி' ஆரம்பிக்கப்பட்டது. மலேஷியா, பர்மா போன்ற பிரதேசங்களில் இருந்தும் பெண்கள் இதில் பங்கேற்க வந்தனர்.
பயிற்சியை முடித்துக் கொண்ட 'ஜான்சி ராணி படையணி' பர்மாவை நோக்கி சென்றது. பர்மாவை அடைந்து அங்கிருந்து டெல்லி செல்வதுதான் மாஸ்டர் பிளான். ஆனால் போர்களம் மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் நினைத்தது போல அவ்வளவு இலகுவாக டெல்லியை அடைய முடியவில்லை. 'ஜான்சி ராணி படையணி' இந்திய பர்மா எல்லையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டியதாகி விட்டது. தொடர்ந்து நகர முடியவில்லை. போதாக்குறைக்கு உணவு மற்றும் போர்ச் சாதனங்கள் வந்து சேரும் பாதையும் மூடப்பட, கொடூரமான பட்டினியை எதிர்கொண்ட 'ஜான்சிராணி படையணி' வேறுவழி இல்லாமல் காட்டிலே கிடைத்த பழங்கள் தானியங்களை உட்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் அதன் நச்சுத்தன்மை காரணமாகவும், ஒவ்வாமை காரணமாகவும் வயிற்றுப் போக்கு, வாந்தி என பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகினர். ஆனாலும் லட்சுமி மனம் தளரவில்லை. தனது மருத்துவ அறிவைக் கொண்டு தன்னால் முடிந்தளவு போராடினார். ஆனால் 1945 மே மாதம் அவர் பிரித்தானியப் படையால் கைது செய்யப்பட்டு மார்ச் 1946 வரை ஏறத்தாழ ஒரு வருடம் பர்மாவின் அடர்ந்த காடுகளில் சிறை வைக்கப்பட்டார். அவரால் முழுமையாக தனது படையணியை காப்பாற்றவும் முடியவில்லை, ஆயுதவழியில் சுதந்திர இந்தியா என்கிற அவர்களது லட்சியத்தையும் அடைய முடியவில்லை,
வரலாறு விசித்திரமானது, மனச்சாட்சி இல்லாதது. அது வாழ்கையில் வெற்றி பெற்றவர்களை - அவர்கள் எந்த வித தியாகமும் செய்யாதபோதும் - அவர்கள் வெற்றி பெற்றவர்கள் எனும் ஒற்றைக் காரணத்துக்காகக் கோபுரத்தில் குடியமர்த்தும். தோல்வி அடைந்தவர்கள் எவ்வளவு தியாகிகளாக, வீரர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்காமல் விட்டுவிடும். இந்த உலக நியதிக்கு லட்சுமி சாகல் மட்டும் எப்படி விதி விலக்காக இருக்க முடியும்?
லட்சுமி சாகல் வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால் அவர் வரலாறிடம் இருந்து எதையும் எதிர் பார்க்கவில்லை. சிறையில் இருந்து மீண்ட உடனேயே தனக்கு தெரிந்த மருத்துவத்தை வைத்து மக்களுக்கு சேவை ஆற்றத்தொடங்கினார். 1947-ல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளுக்காக தனது மருத்துவ சேவையை ஆரம்பித்தார். தன்னால் முடியும் வரை இறுதி மூச்சு வரை சேவை ஆற்றிக்கொண்டே இருந்தார்.
1970-ல் மேற்கு வங்க முதலமைச்சர் ஜோதிபாசுவின் வேண்டுகோளை ஏற்று பங்களாதேஷ் அகதிகளுக்காக மருத்துவ முகாமை தலைமை ஏற்று நடத்தினார். சுமார் ஜந்து வாரங்கள் இந்தியா - பங்களாதேஷ் எல்லையில் முகாம் அமைத்து தன்னால் ஆன பணியை உளச்சுத்தியுடன் செய்தார். ( அந்தக் கால ) கம்யூனிசம் மேல் நம்பிக்கை கொண்டு சி. ப்பி.ஜ (CPI) யில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த தருணத்தை அவர் "மீண்டும் எனது சொந்த வீட்டிற்கு வருவது போல உள்ளது" என தனது இந்திய தேசிய ராணுவ நாட்களை தொடர்புபடுத்தி சந்தோஷப்பட்டார்.
பெண்களின் கல்வி, சமூக அந்தஸ்து, வேலைவாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் பொருட்டு உருவாக்கப்பட்ட AIDWA-வின் [All India Democratic Women's Association] ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவராக இருந்தார். அது மாத்திரம் அன்றி AIDWA சார்பாக பல நீதிப் போராட்டங்களை நடத்தினார்.
1984-ல் நடந்த போபால் விஷவாயுக் கசிவு அவலத்தை தொடர்ந்து தனது தலைமையில் ஒரு குழுவுடன் போபால் சென்று பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு தன்னால் முடிந்த மருத்துவ உதவிகளைச் செய்தார். 1984-ல் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையின்போது தனது வாழிடமான கான்பூரில் மக்களைத் திரட்டி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராகப் போராடினார்.
தனது இறுதி மூச்சு வரை - ஜூலை மாதம் 24ம் தேதி வரை - தன்னாலானதை இந்த சமூகத்திற்கு செய்து கொண்டிருந்தார்.
இன்று லட்சுமி சாகல் நம்மிடம் இல்லை. ஆனால், அவர் விதைத்து விட்டுச் சென்ற விதை இன்று பல்கிப் பெருகி பெரும் விருட்சமாக உள்ளது.
வாழ்க்கை முழுவதுமே போராளியாக அறியப்பட்ட அவரிடம் ஒரு முறை "இந்தியாதான் சுதந்திரம் அடைந்து விட்டதே இன்னும் எதற்காக போராடுகிறீர்கள்..? " என்று கேட்டார் ஒரு பத்திரிகையாளர். அவரைப் பார்த்து சிரித்துவிட்டு "நாம் காலனிய ஆட்சியில் இருந்துதான் சுதந்திரம் அடைந்து விட்டோம். ஆனால் சமூக ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. இந்த மூன்றில் இருந்தும் எப்போது ஒன்றுசேர சுதந்திரத்தை அனுபவிக்கிறோமோ அதைத்தான் உண்மையான சுதந்திரம் என நான் ஏற்றுக் கொள்வேன். அதுவரை சுதந்திரத்துக்கான எனது போராட்டம் தொடரும் !" என்றார்.
அங்கே நிற்கிறார் லட்சுமி சாகல்.!
நன்றி - விகடன்
No comments:
Post a Comment