தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி. 2006-ம் ஆண்டு கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 800 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதக்கம் பெற்றுக் கொடுத்தார்.
ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் ஆண் தன்மை அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. அதோடு அவர் தடகள போட்டியிலும் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சாந்தி செங்கல் சூளையில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக வேலை பார்த்து வருவது தெரியவந்தது.
இது குறித்து சாந்தி கூறியதாவது:-
இது குறித்து சாந்தி கூறியதாவது:-
என்னுடைய அனைத்து சாதனைகளும் அழிக்கப்பட்டு விட்டன. இப்போது என்னுடைய பெற்றோருடன் இணைனந்து புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிஞ்சியில் ரூ.200 ஊதியத்துக்கு தினக்கூலியாக பணியாற்றி வருகிறேன்.
முன்னதாக மாநில அரசின் பயிற்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டேன். அங்கு எனக்கு தரப்பட்ட ஊதியம் மிக குறைவாக இருந்தது. பணி நிரந்தரம் செய்யப்படாததால் அந்த பயிற்சியாளர் பதவியை விட்டுவிட்டேன். சிறந்த பயிற்சியாளராக வர விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை. தற்போது அரசின் வேறு பணிக்கு முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்.
என்னை போன்ற இதே பிரச்சினை தென்ஆப்பிரிக்க வீராங்கனை செமன்யாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அவருக்காக அந்நாட்டு தடகள சங்கம் உதவியது. தற்போது அவர் லண்டன் ஒலிம்பிக்கில் அந்நாட்டு கொடியை ஏந்தி செல்கிறார்.
என்னுடைய நிலைக்கு இந்திய தடகள சங்கத்தின் அலட்சியமே காரணம். எந்தப் போட்டியிலும் பங்கேற்க கூடாது என்று தடைவிதித்து எனது கால்களை முடக்கிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் சாந்தி விவகாரத்தில் தலையீட்டு அவருக்காக போராடுவோம் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அஜய் மக்கான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீராங்கனை சாந்தியின் இன்றைய நிலைமை கவலை அளிக்கிறது. அவருக்கு நடந்த பாலின சோதனையை மீண்டும் மறு ஆய்வு செய்ய விரும்புகிறேன். இந்த விஷயத்தில் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அது மேற்கொள்ளப்படும். தென்ஆப்பிரிக்க வீராங்கனை செமன்யாவுக்கு அந்நாடு போராடியதுபோல நாங்கள் இந்த விவகாரத்தில் தலையிடுவோம். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்த விவகாரத்தை கொண்டு செல்வோம்.
அவரது சாதனையையும் பதக்கமும் மீண்டும் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவர் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றால் நாங்கள் உதவி செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment