12 படங்கள்தான் இயக்கினார் என்றாலும்... காலத்தை தாண்டிய கல்வெட்டுகளாக நிற்கின்றன அவரது படைப்புகள்.
முதல் படம் முள்ளும் மலரும். தமிழ் சினிமாவுக்கே புதிய அங்கீகாரத்தையும் அர்த்தத்தையும் தந்தது அந்தப் படம் என்றால் மிகையில்லை.
ரஜினி என்ற மகா கலைஞனின், யாரும் பார்த்திராத நடிப்புப் பக்கத்தைக் காண வைத்தது முள்ளும் மலரும்தான்.
தொடர்ந்து வந்த உதிரிப் பூக்கள், பூட்டாத பூட்டுகள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி என அனைத்துமே புதிய அனுபவத்தைத் தந்தன ரசிகர்களுக்கு.
மகேந்திரன் படங்கள் அனைத்துக்குமே இசை இளையராஜாதான். கடைசியாக வந்த சாசனம் தவிர. பாடல்கள் ஒவ்வொன்றும் மகா ரசனையானவை.
இளையராஜா அழகழகாய் மெட்டுக்கள் போட்டுத் தர, கவியரசர் காவியமாய் பாடல்கள் இயற்ற, அவற்றை காலம் சிறு கீறல் கூட போட்டுவிட முடியாத கல்வெட்டுக்களாய் செதுக்கி வைத்தார் மகேந்திரன்!
செந்தாழம் பூவில், அழகிய கண்ணே, ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது, ஏ தென்றலே..., மெட்டி ஒலி, பருவமே, உறவெனும்..., இப்படி எத்தனையோ பாடல்கள், மூன்று தசாப்தங்களையும் தாண்டி ரசிக மனங்களை ஆளுகின்றன.
மகேந்திரன் கடைசியாக இயக்கிய படம் சாசனம். என்எப்டிசிக்காக அந்தப் படத்தை சின்ன பட்ஜெட்டில் இயக்கினார். அதன் பிறகு அவர் சினிமா எதையும் இயக்கவில்லை. முந்தைய ஜெஜெடிவிக்காக ஒரு சீரியலும் இயக்கியுள்ளார்.
ஏழாண்டுகள் இடைவெளி... ஆனாலும் தனக்குப் பிடித்த சினிமா, தனக்குப் பிடித்த இசை என வாழ்ந்து கொண்டிருக்கும் மகேந்திரன் விரைவில் ஒரு புதிய சினிமாவுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளார்.
உறவுகள், அன்பு, இயல்பான எளிய வாழ்க்கைதான் மகேந்திரன் படைப்புகளின் பின்புலமும் பலமும். இன்று திரையில் நம்மால் பார்க்கவே முடியாத விஷயங்களும் இவையே.
இன்று மகேந்திரனின் பிறந்த நாள். மீண்டும் தன் அழகழகான படைப்புள் மூலம் அவர் திரையை ஆள வேண்டும் என வாழ்த்துகிறோம்!
No comments:
Post a Comment