இயக்குனர் ஜீவன் இயக்கத்தில் நடிகர் அமரன், நடிகை சோனு ஜோடியாக நடித்துள்ள படம் ‘அமரா’. சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று(04.07.12) நடந்த அமரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், தனஞ்செயன், பிரபுசாலமன், கரு.பழனியப்பன், கலைப்புலி S சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அமரா படத்தின் இசையை வெளியிட்டபின் மேடையில் பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன் “ மேடையில் இருக்கும் இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் சபையில் இருப்பவர்களுக்கும் எனது வணக்கம். அமரா படத்தின் இயக்குனர் ஜீவனை, எனக்கு அவரது தம்பி சுகுமார் மூலமாகத் தான் தெரியும். ஏனென்றால் சுகுமார் ஒரு சுறுசுறுப்பான மனிதர்.
ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக நான் பார்த்த சுகுமார் இன்று கேமராமேனாக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது அண்ணன் ஜீவன் தான். ஜீவன் ஒளிப்பதிவு செய்திருந்த ‘சாட்டை’ படத்தை சமீபத்தில் பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிடைத்த வாய்ப்பையே விடாமல் பயன்படுத்திக் கொண்ட ஜீவன் அவர் இயக்கிய படத்தை பிரம்மாதமாக எடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.
சினிமாவில் போட்டி என வந்துவிட்டால் ‘பாக்க பாக்க பிடிக்கும்;பாத்த உடனே பிடிக்கும்’ என்று வரும். ஆனால் இம்மானை பொருத்த வரையில் அவர் பெயரை கேட்டாலே பிடிக்கும்.
அந்த மனிதன் எப்படி 24 மணி நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கிறான் என நான் பலமுறை வியந்துள்ளேன். நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து எல்லோரும் பூடகமாகவே பேசிக்கொண்டிருக்கின்றனர். சேகரன் சார் ரொம்பவே கோவமா பேசினார். தமிழ் சினிமா கெட்டுப் போனதுக்கு யார் காரணம் யார் காரணம்னு கேட்கிறார். நான் சொல்கிறேன் அதற்கு தனஞ்செயன் தான் காரணம்.
UTV தயாரிக்கும் ‘முகமூடி’ என்ற படத்திற்கு ஒரு முழு பக்கம் செய்தித்தாள் விளம்பரம் கொடுத்துள்ளார். ஏனென்று கேட்டால் இந்தி படங்களில் அப்படித் தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். இந்தி படங்களில் கொடுத்தால் நீங்களும் வடநாட்டு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தமிழ் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறீர்கள்.
பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு ‘குவாட்டர்’ பாட்டில் அளவில் தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என கொண்டு வந்த முடிவை நீங்கள் மீறினால் மற்றவர்களும் உங்களை காரணம் காட்டி இரண்டு பக்க விளம்பரம் கொடுக்க மாட்டார்களா? நான் கண்டிப்பாக என் படத்திற்கு இரண்டு பக்க விளம்பரம் தான் கொடுப்பேன். உங்களை கண்டிக்க ஆள் இல்லை.
அவர்கள் படத்தை நீங்கள் வாங்கிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலே எதையும் கேட்காமல் அமைதியாக இருந்துவிடுகின்றனர். நான் சொல்கிறேன் என கோபித்துக்கொள்ளாதீர்கள் தனஞ்செயன் சார் ‘நீங்கள் அனைவருமே நன்றாக வியாபாரம் ஆகும் படத்தை வாங்கி நல்ல தயாரிப்பாளர் என்ற பெயர் பெறுகிறீர்கள்.
நாங்கள் நல்ல படங்களை எடுத்து அதை விற்க போராடுகிறோம்’ அது தான் சிக்கல். தனஞ்செயன் விளம்பரம் கொடுத்து ரசிகர்களை இழுத்து படம் பார்க்க யாரும் இல்லை எனக் கூறுகிறார். ஜீவன் நல்ல படத்தை எடுத்து ரசிகர்களை இழுத்து தனஞ்செயனை தோற்கடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்” எனக் கூறினார்.

No comments:
Post a Comment