தமிழ்நாடு முழுவதும் 6,802 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் 30 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 4,730 டாஸ்மாக் கடைகளில், மது அருந்துவதற்கு வசதியாக பார் வசதி செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில், கடந்த ஜுன் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுபாட்டில்கள் இருப்பு கணக்கெடுக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மதுபாட்டில்கள் உள்ளன என்ற விவரத்தை டாஸ்மாக் பிராந்திய அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விலை உயரப்போகிறது என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக மதுபானங்களின் விலை எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று (திங்கட்கிழமை) முதல் மது வகைகள் பாட்டிலுக்கு ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகள் (சாதாரண ரகம்), குவாட்டர் பாட்டில் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.5 விலை உயர்ந்து, ரூ.70-க்கு விற்கப்படுகிறது. இதேபோல், ரம், பிராந்தி, விஸ்கி போன்றவற்றின் நடுத்தர ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை அதிகரிக்கப்படுகிறது.
பிரீமியம் ரக வகைகளும் இதேபோல், ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது. இதேபோல், அரை (ஆப்) மற்றும் முழு (புல்) பாட்டில் மது விலைகள் ரூ.45 வரை உயர்த்தப்படுகிறது. சாதாரண ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.125, ரூ.130 மற்றும் ரூ.135 ஆக உள்ளது. இனி இந்த வகைகள் அனைத்தும் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது.
இதில் நடுத்தர ரகங்கள் தற்போது ரூ.145, ரூ.155 ஆக உள்ளது. இந்த வகைகள் அனைத்தும் இனி ரூ.165 ஆக உயரும். பிரீமியம் ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.155, ரூ.160 ஆக உள்ளது. இவற்றின் விலை இனி ரூ.180 ஆக உயரும். முழு பாட்டில் சாதாரண ரகத்தின் விலை தற்போது ரூ.235, ரூ.245, ரூ.255 ஆக உள்ளது.
இனி இந்த ரகங்கள் அனைத்தும் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.280க்கு விற்கப்படும். முழு பாட்டில் நடுத்தர ரகங்களின் விலை தற்போது ரூ.280, ரூ.295க்கு ஆக உள்ளது. இனி ரூ.320 ஆக இவற்றின் விலை உயர்த்தப்படும். பிரீமியம் ரக முழு பாட்டில் விலை தற்போது ரூ.315, ரு.320, ரூ.360 ஆக இருந்தது,.
இனி இவற்றின் விலை ரூ.360 ஆக உயர்த்தப்படும். ஆனால், பீர் வகைகள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் கடந்த ஆண்டு 536 லட்சம் பெட்டிகள் மது வகைகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு, 600 லட்சம் பெட்டிகள் விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மதுபானம் விற்பனை மூலம் தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு 18 ஆயிரத்து 81 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு, வருவாய் 20 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், இந்த விலை உயர்வால் அரசுக்கு ரூ.800 கோடி மேலும் வருவாய் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மதுவகைகள் இன்று முதல் பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்படுவதால், மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாக புகார் தெரிவிக்கும் மது பிரியர்கள், மேலும் விலை உயர்த்தப்படுவது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தனர்.
No comments:
Post a Comment