நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது என்பது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் நடவடிக்கையைப் பொறுத்தது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி கூறியதாவது:
நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படக் கூடிய சூழ்நிலை பற்றிய கேள்வி எழத் தேவையில்லை. அரசியல் கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைப் பொறுத்துதான் முன்கூட்டி தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது தெரியவரும்.
நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர் முடங்கிப் போய்விட்டதாலேயே முன்கூட்டியே தேர்தலை எப்படி நடத்த முடியும்? இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு கூட இப்படி கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி விவாதிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கட்சி ஆட்சி நடத்துகிறது. அப்படியான சூழலில் எல்.கே.அத்வானி கூறுவதைப் போல மக்களவைக்கும் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் எப்படி தேர்தல் நடத்த முடியும்? அரசியல் சாசனப்படியும் இது சாத்தியமானது அல்ல. மக்களவைக்கும் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அரசியல் சாசனத்தில்தான் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment