பாராளுமன்றத்துக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே இருப்பதால், காங்கிரஸ் கட்சி தயாராகத் தொடங்கி விட்டது.
2004 மற்றும் 2009-ம் ஆண்டு தேர்தல்களில் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு காங்கிரசுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கூட்டணி கட்சிகளால் கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் பல தடவை நெருக்கடிக்குள்ளானார்கள். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சிக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே உரசலும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட்டுள்ளது. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றால்தான் கூட்டணி கட்சிகளின் நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.
எனவே 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. குறிப்பாக பெரிய மாநிலங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றினால்தான் மெஜாரிட்டி பலம்பெற முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகிறார்கள்.
இதை கருத்தில் கொண்டு காங்கிரஸ் தலைவர்கள் இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரசை வலுப்படுத்தும் திட்டமும் வரையறுக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் ராகுல் தலைமையில் தேர்தல் பணிக்குழு செயல்படும். இவர்கள்தான் கூட்டணி, பிரசாரம், வேட்பாளர் தேர்வு உள்பட எல்லாவற்றையும் கவனிக்க உள்ளனர்.
அவர்கள் தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள சில கட்சிகளை கழற்றி விட்டு, விட்டு புதிய கட்சிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வரும் என்று தகவல்கள் வெளியாக தொடங்கி உள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர்த்து விட்டு விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் காங்கிரஸ் - தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment