ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நடந்தது.
டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முகமது ஹபீஸ் 78 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், ஜான்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மைக் ஹஸ்ஸி 65 ரன் எடுத்தார். மாஸ்வெல் 56 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் சயீத் அஜ்மல் 3 விக்கெட்டும், ஜூனைத்கான், அப்துர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
No comments:
Post a Comment