சிகரெட் உள்ளிட்ட எந்தவொரு புகையிலை பொருளையும் பயன்படுத்துவது உடல்நலத்துக்கு கேடானது. பீடி, சிகரெட், அவற்றைப் புகைப்பவர்களுக்கு மட்டுமல்லாது, மற்றவர்களுக்கும் (உடனிருப்பவர்களையும்) பாதிப்பை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் உண்டாக்குகிறது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு, காந்தி ஜெயந்தி நாளில் அமலுக்கு வந்தது. பொது இடங்களில் பீடி, சிகரெட், சுருட்டு புகைத்தால் அதற்கு அபராதம் விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்களின் தீவிர பாதிப்பை கருத்தில் கொண்டு, சினிமாவில் புகைபிடிக்கும் காட்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த தடைகளால் புகையிலை பொருட்களை தயாரிக்கிற நிறுவனங்கள் குறிப்பாக சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. இதன் காரணமாக அரசு உத்தரவுக்கு எதிராக அந்த நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. வர்த்தக அடிப்படை சுதந்திரத்தை அரசின் தடை உத்தரவு மீறிவிட்டதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-
திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிக்கு விதிக்கப்பட்ட தடை தளர்த்தப்படுகிறது. சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி வருகிறபோது, புகை பிடித்தால் ஏற்படும் ஆபத்து குறித்த எச்சரிக்கை வாசகங்களை திரையில் ஓட விட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் புகை பிடிக்கும் காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்.
அதே நேரத்தில் அடிப்படை உரிமைகள் என்பது வரம்பற்றவை அல்ல. பொது நலன், மக்கள் நலன், நாட்டுநலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு உரிமையின் மீதும் அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளை அரசு விதிக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment