மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோர் முட்டுக்காடு பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீனவர் சங்கம் புகார் அளித்துள்ளது.
இது குறிதக்து தென்னிந்திய மீனவர் பேரவையின் நிறுவனத் தலைவர் ஜெயபாளையன் தலைமையில் முட்டுக்காடு அருகே உள்ள கரிக்காட்டுக் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 மீனவர்கள் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், பிரபல வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான 5 ஏக்கர் 11 சென்ட் நிலம் முட்டுக்காடு அருகே உள்ள கரிக்காட்டுக்குப்பம் பகுதியில் உள்ளது.
இந்த நிலத்தின் அருகே அரசுக்கு சொந்தமான மேய்கால் மற்றும் ஆற்றுப் புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இந்த நிலத்தில் சுமார் 4 ஏக்கர் வரை இவர்கள் ஆக்கிரமித்து 20 அடி உயரத்திற்கு சுவரைக் கட்டியுள்ளனர். இந்த பகுதி வழியாகத்தான் கரிக்காட்டுக்குப்பம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு செல்வார்கள்.
மேலும் இந்த புறம்போக்கு நிலத்தில்தான் மீனவர்கள் வலைகளை உலர்த்தி வந்தனர். தற்போது இந்த இடங்களை ஆக்கிரமித்து சுவர் கட்டியிருப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு வழி ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சிதம்பரம் தரப்பு மறுப்பு:
இதையடுத்து நளினி சிதம்பரத்தின் சார்பில் வழக்கறிஞர் அருள் நடராஜன் இன்று கமிஷனர் அலுவலகத்தில் தந்த மனுவில், எனது கட்சிக்காரர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நிலத்தை வாங்கியுள்ளார். இதற்கு முறையான ஆவணங்கள் உள்ளன.
2004ம் ஆண்டு சுனாமி தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டபோது எனது கட்சிக்காரருக்குச் சொந்தமான அந்த இடத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. இது குறித்து நளினி சிதம்பரம் சார்பில் கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தற்போது மீனவர்கள் கொடுத்துள்ள புகார் பொய்யானது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment