சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா போய் விட்டதால், எதிர்க்கட்சிகளின் கிடுக்கிப் பிடியில் சிக்கி காங்கிரஸ் கட்சி திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முழுமையாக பாதிக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா போயுள்ளார். அவர் ஒரு வாரம் கழித்தே திரும்புவார் என்று தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆபத்பாந்தவனுமாகவும் திகழ்ந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராகி விட்டதால், தற்போது காங்கிரஸ் கட்சியில் வலுவான ஒரு தலைவர் இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் எதாக இருந்தாலும் சோனியாவே நேரடியாக செய்யும் நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
தற்போது சுரங்க ஊழல் முறைகேடுகள் குறித்து பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புயலைக் கிளப்பி வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது முதலே உருப்படியாக அலுவல் நடைபெறாமல் உள்ளது. கூட்டம் தொடங்கி 8 நாட்களாகியும் அலுவல்கள் நடைபெறாமல் உள்ளது.
இந்த நிலையில்தான் சோனியா காந்தி வெளிநாட்டுக்குப் புறப்பட்டுப் போயுள்ளார். இதனால் காங்கிரஸார் பெரும் திண்டாட்டத்தை நாடாளுமன்றத்தில் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் காங்கிரஸில் இருந்தாலும் கூட பிரணாப்பைப் போல திறமையாக சமாளிக்கக் கூடிய யாரும் அங்கு இல்லை என்பதால் சோனியா காந்தி இல்லாத இந்த நாட்களில் பாஜகவினரிடம் நிச்சயம் காங்கிரஸார் பெரும் சிக்கலைச் சந்திப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மழைக்காலக் கூட்டத் தொடர் சுத்தமாக அலுவல் ஏதும் இன்றி முடிந்து போகும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன.
எதிர்க்கட்சியினரை மிகுந்த துணிச்சலுடன், எதிர்வாதம் செய்து அவர்கள் பாணியிலேயே சமாளிக்குமாறு காங்கிரஸாருக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். எனவே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment