பெரம்பலூர் அருகே கோவிலுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த அய்யனார் சிலை மற்றும் 2 குரைகள் சிலைகளை காணவில்லை. இதனால் இரு கிராமங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் அருகே உள்ளது மங்களம் என்னும் கிராமம். அங்குள்ள கோவிலில் கடந்த 23ம் தேதி திருவிழா நடத்தி சாமி சிலைகளை கோவிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். அன்று இரவோடு இரவாக கோவில் கதவின் பூட்டை உடைத்து மரத்தால் ஆன பெரியசாமி அய்யனார் சிலை மற்றும் இரண்டு குதிரைகள் சிலைகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
மறுநாள் காலை கோவிலுக்கு வந்த பூசாரி பூட்டு உடைக்கப்பட்டு சிலைகள் கடத்தப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து தர்மகத்தாவுக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து ஊர் மக்கள் போலீசாரிடம் கூறுகையில்,
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலத்தின் சொந்த ஊரான அசூரில் குதிரை சிலைகள் கடத்தப்பட்டது. அந்த சிலைகளை உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாதூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் கடத்தியாக பேசப்பட்டது என்றனர்.
இதையடுத்து போலீசார் பாதூருக்கு சென்றனர். ஆனால் பாதூர் மக்கள் போலீசாரை ஊருக்குள் விடவில்லை. அதனால் விசாரணை நடத்தப்படவில்லை. இது குறித்து அறிந்த மங்களம் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை சமாதானம் செய்துவிட்டு சுமார் 100 போலீசார் பாதூருக்கு சென்றனர். பாதூர் மக்கள் போலீசாருக்கு ஊரைச் சுற்றிக் காண்பித்து சிலைகள் அங்கு இல்லை என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதூர் கிராமத்தினர் பற்றி மங்களம் கிராமத்தினர் சிலர் கூறுகையில்,
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பாதூர் கிராமத்தினர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் ஊர் திருவிழாவின்போது ஏதாவது ஒரு ஊரில் இருந்து மரக்குதிரைகளை கடத்தி அய்யனாரை அதில் ஏற்றி ஊர்வலம் நடத்துவார்கள். அதன் பிறகு கடத்திய குதிரை சிலைகளை எரித்துவிடுவார்கள். அதனால் பாதூரில் திருவிழா என்றாலே அதன் சுற்றுவட்டாரக் கிரமாத்தில் உள்ளவர்கள் அங்குள்ள சிலைகளை பத்திரப்படுத்துவார்கள். இம்முறை மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து எங்கள் ஊரில் சிலைகளை கடத்தியுள்ளனர் என்றனர்.
ஆனால் பாதூர் மக்களோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மேலும் தங்கள் ஊரில் உள்ள அய்யனார் கோவிலுக்கு பல மாவட்டத்தினர் நன்கொடை அளிப்பதாகவும் அடுத்த ஆண்டு வெள்ளிக் குதிரை செய்யவிருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் 15 நாட்கள் நடத்தப்படும் பாதூர் திருவிழாவில் ஒரு நாள் செலவுக்கே ரூ.50,000 ஒதுக்குவதாகவும், அவ்வாறு செலவு செய்பவர்கள் எதற்காக குதிரையை திருட வேண்டும் என்று கேட்கின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்பு குதிரை சிலை திருடியதாக பாதூர் மீது திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பானதைச் சொல்லி பெருமைப்படுகின்றனர்.
No comments:
Post a Comment