இந்த நேரத்தில் படம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா எச்சரித்துள்ளார்.
ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி உலகெங்கும் வெளியான லிங்கா படம் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. ஆனால் சிலர் வேண்டுமென்றே படத்துக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
படத்தில் நேரடியாக சம்பந்தப்படாத இவர்கள், தாங்கள்தான் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து லிங்காவை வாங்கியதாகக் கூறி வருகின்றனர். ஆனால் விசாரிக்கையில் சில மீடியேட்டர்கள் (சினிமா புரோக்கர்கள்) திட்டமிட்டு இந்த மாதிரி பொய்யை கட்டவிழ்த்துள்ளது தெரிய வந்து, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் லிங்கா தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும்.
இந்த நிலையில் படத்தின் தமிழகம் மற்றும் கேரள வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள வேந்தர் மூவீஸ், இதுபோன்ற போலி ஆசாமிகளின் புகார்கள் மற்றும் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வேந்தர் மூவீஸ் சார்பில் டி சிவா வெளியிட்டுள்ள அந்த அறிக்கை: கடந்த இரண்டு நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான விபரங்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள். லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டுத் தேர்வு நடப்பதாலும், தமிழ் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600 அரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்டதாலும், எதிர்ப்பார்த்ததை விட சற்று வசூல் குறைந்தது.
ஆனால் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகின்றன.
இதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி. லிங்கா மக்களுக்குப் பிடித்த படம். விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே படத்தின் வசூல் பற்றிய எல்லா விபரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது.
மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். -இவ்வாறு தயாரிப்பாளர் டி சிவா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment