Tuesday, December 23, 2014

விஜயகாந்த் பரபரப்பு பேச்சு: திமுகவுடன் கூட்டணியா?

தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமையுமா? என்பதற்கு விஜயகாந்த்  பதில் அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.  விழாவுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கி, ஏழைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி அளித்தார். 

மேலும், பல்வேறு நலத்திட்ட  உதவிகளையும் அவர் வழங்கினார். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற பேராயர் எஸ்றா சற்குணம் பேசும்போது, ‘விஜயகாந்த் யார், யாரையெல்லாமோ  முதல்வர் மற்றும் பிரதமராக்கியுள்ளார். அதன் பின்னர் அவரை கழற்றி விட்டு விடுகின்றனர். நானும் கடந்த 3 வருடங்களாக கிறிஸ்துமஸ் விழாவில்  பங்கேற்கும் போது எல்லாம் வேண்டுகோள் விடுத்து வருகிறேன். இந்த முறையாவது இந்த பழம் பழுக்குமா? இது இலவம் பழமா? இலந்தபழமா?  என்று தெரியவில்லை. ஆனால், பழுக்கும் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு உள்ளது. 

வரும் காலத்தில் கூட வேண்டியவர்களிடம் கூட வேண்டும். தேமுதிகவில் தேசியமும் உள்ளது. திராவிட கொள்கையும் உள்ளது. உங்கள்  கொள்கையும், திராவிட இயக்க கொள்கையும் ஒன்றாகவே உள்ளது. உங்கள் சிந்தனையும் அது தான். மூழ்கி கிடக்கும் கப்பலை, நீங்கள் தான்  காப்பாற்ற வேண்டும்’ என்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: பேராயர் எஸ்றா சற்குணம் பழம் பழுக்குமா? என்று கேட்டார். அவர்  திமுக தலைவரை தான் சொல்கிறார் என்பதை தெரிந்து விட்டேன். அது பற்றி பேச வேண்டிய இடம் இது இல்லை. அது பற்றி இப்போது பேச  வேண்டாம் என்று நினைக்கிறேன். இது கிறிஸ்துமஸ் விழா. பேராயர் கேட்ட கேள்விக்கு நான் பிறகு பதில் அளிக்கிறேன். வெளிநாட்டில் இருந்து  அண்மையில் நான் சென்னை திரும்பினேன். விமான நிலையத்தில் இருந்து காரில் சென்ற போது குண்டும், குழியுமான சாலையால் எனது  இடுப்புவிட்டு போனது. 

சுத்தமானவர்கள், நியாயமானவர்கள் என்றால் பேச வேண்டியது தானே. மக்களின் முதல்வர் என்று சொல்லிக்கொண்டு கையை அசைத்து விட்டு  சென்றவர், வீட்டின் கதவை பூட்டிக் கொண்டு வீட்டில் இருப்பாரா?. மக்கள் முதல்வரால் மக்கள் பிரச்னையை தீர்க்க முடியவில்லை. சென்னையில்  மழைநீர் வடிகால்வாய் ஸீ 5000 கோடியில் கட்டுகிறோம் என்றார்கள். ஆனால், கட்டியபாடில்லை. இதனால், ஒருவர் உயிர் போனது தான் மிச்சம். பஸ்  கட்டணம் உயர்வு, பால் விலை, மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள் ளது. இந்த சுமை மக்கள் தலையில் தான் போய் விழுகிறது. கேட்டால் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது, அதனால் தான் உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார் கள். அரசு நடத்தும் டாஸ்மாக்கில் என்றாவது நஷ்டம் என்று சொல்கிறார் களா?  ஏனென்றால் டாஸ் மாக்குக்கு சரக்குகளை சப்ளை செய்யும் மது நிறுவனங்கள் அவர்களுடையது என்பதால் தான். 

பிரபாகரன் இருந்த வரை மீனவர்கள் பிரச்னை வரவில்லை. அவர் இறந்துவிட்டார் என்றவுடன் மீனவர் பிரச்னை வருகிறது. லேப்டாப் மற்றும் ஆடு,  மாடுகள் கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். தற்போது இதில் ஊழல் நடந்துள்ளதாக தணிக்கை துறை அறிக்கை யில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விஜயகாந்த் யாருக்கும் போட்டி கிடையாது. என் பின்னால் தொண்டர்கள் இருக்கிறார்கள். எந்த பிரச்னை என்றாலும் மத்திய அரசை தமிழக அரசு  குற்றம்சாட்டி வருகிறது. அவர்களை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக ஆட்சியை கலைத்துவிட்டு போகலாமே. எந்த பிரச்னை என்றாலும் பிரதமருக்கு  கடிதம் எழுதுகிறேன் என்கிறார்கள். பிரதமருக்கு யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். அந்த கடிதம் பிரதமருக்கு போய் தான் சேரும். தமிழகத்தில்  தற்போது நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும். சாது மிரண்டால் காடு கொள்ளாது. 

மக்கள் விரைவில் வெகுண்டு எழுவார்கள். இந்த ஆட்சியை அவர்கள் அகற்றுவார்கள்.  இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பேராயர்கள் எஸ்றா  சற்குணம், சுந்தர்சிங், ராஜாசிங், ஸ்டீபன், விஜயகாந்த மனைவி பிரேமலதா, இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர்  பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார், பொருளாளர் இளங்கோவன், மாவட்ட செயலா ளர் வி.என்.ராஜன், காமராஜ், யுவராஜ் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொசு தொல்லை தாங்க முடியலடா நாராயணா 

ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் கொசுத்தொல்லை தாங்கவில்லை அதிகமாக இருந்தது. இதற்காக வீடுகளுக்கு நொச்சி செடி வழங்கப்படும். 6  லட்சம் பேருக்கு இலவச கொசு வலை வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், வாங்கி கொடுக்காமல் ‘ஸ்வாகா‘ போட்டு விட்டனர். இதனால்  கொசு தொல்லையை தாங்க முடியலடா நாராயணா என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர் என்றார் விஜயகாந்த்.

No comments:

Post a Comment