திரைப்படக் கலைஞர்களை ஆளும் கட்சி உறுப்பினர் தரக்குறைவாக பேசியதாக, ஆந்திர சட்டப்பேரவையில் நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான ரோஜா கண்ணீர் விட்டு அழுதார்.
ஆந்திர சட்டப்பேரவையில் நேற்று விவசாயிகளின் வங்கிக் கடன் ரத்து குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராஜமுந்திரி எம்எல்ஏ கோரண்ட்லா புச்சய்ய சவுத்ரி பேசும்போது ரோஜா குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமைடைந்த அவர், “இது திரைப்படம் அல்ல, சில திரைப்படங்களில் வில்லியாக நடித்திருக்கலாம். அந்த வேடம் எல்லாம் இங்கு வேண்டாம். வாய்ப்பு வழங்கும்போது உன் கருத்தை கூறு” என காட்டமாக கூறியுள்ளார்.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். திரைப்படக் கலைஞர்களை சவுத்ரி தரக் குறைவாக பேசியதாகக் கூறி ரோஜா கண்ணீர் விட்டு அழுதார். இதனைத் தொடர்ந்து மாலை 4 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, ரோஜா உட்பட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சிலர் கோரண்ட்லா புச்சய்ய சவுத்ரி மீது புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது.
“ரோஜா அவையில் மிகவும் தரக் குறைவாக நடந்து கொள்கிறார். அவரை உடனடியாக அவையிலிருந்து இடைநீக்கம் செய்யுங்கள்” என அமைச்சர் சுஜாதா உட்பட ஆளும் கட்சியைச் சேர்ந்த பல பெண் எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். இதனால் சபையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக இரு கட்சியிலும் தலா 2 உறுப்பினர் உட்பட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் உறுதி அளித்தார். இதையடுத்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்தன.
No comments:
Post a Comment