Tuesday, December 16, 2014

கிரானைட் குவாரியில் சமாதியாக்குவோம்: சகாயத்திற்கு மிரட்டல்

கிரானைட் முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை செய்தால், குவாரியில் போட்டு சமாதி ஆக்கி விடுவோம் என சட்ட ஆணையர் சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ரூ.16000 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு உத்தரவிட்டிருந்தது. 

முதல்கட்டமாக கடந்த மூன்றாம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை மனுக்களை பெற்ற சகாயம், 2-வது கட்ட விசாரணையை தொடங்குவதற்காக விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். 

அவர் வருவதை அறிந்த ஏராளமான பொதுமக்கள் முகாம் அலுவலகத்திற்கு திரண்டு வந்திருந்தனர். சகாயம் வந்தவுடன் பொதுமக்கள் ஆர்வமுடன் அவரிடம் மனு அளித்தனர். 

இதில், நேரடியாக 53 மனுக்களும், அஞ்சல் மூலமாக 31 மனுக்களும் பெறப்பட்டது. இதில், அஞ்சல் மூலம் வந்த கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தபோது, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்திற்கு கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டிருந்தது.

குவாரியில் சமாதியாக்குவோம் 

ஊஞ்சனை காளியம்மன் துணை என ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ''உயர்திரு. சட்டப்பணி ஆணையர் சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு, குமார் எழுதும் கடிதம். கிரானைட் குவாரி என்னுடைய உறவினர்களும் மற்றும் எனக்கு வேண்டப்பட்டவர்களும் கனிம வள குவாரி நடத்துகிறார்கள். அவர்களிடம் எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. எந்தவித இடையூறும் கொடுக்கக்கூடாது.

உடனே மதுரையை விட்டு வெளியேற வேண்டும். இல்லையென்றால் நீங்கள் உயிருடன் திரும்ப முடியாது. அதையும் மீறி தொந்தரவு கொடுத்தால், இங்குள்ள குவாரியில் போட்டு சமாதி ஆக்கிவிடுவோம். சகாயம் உடம்பிலுள்ள கறி கூறுபோட்டு விற்கப்படும்.

என் மனைவி பிரேமா ராணி நெடுஞ்சாலைத் துறையில் ஈரோடு மாவட்டத்தில் வேலை செய்கிறார். இவருக்கு பதவி உயர்வும், சேலத்திற்கு பணியிட மாற்றமும் செய்ய நீங்கள் உதவி செய்ய வேண்டும்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அவர் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இவருக்கு பணி உயர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நீங்கள் மதுரையில் தங்கி விசாரணை நடத்தக்கூடாது. விசாரணையை விலக்கிக் கொள்ள வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.இதனால், தமிழக அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.

கிரானைட் அதிபர்களால் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயாள், சாந்தி, மைக்கேல் ஜெரால்டு ஆகியோர் சகாயத்தை சந்தித்து மனு அளித்தனர். மதுரையை அடுத்த புது தாமரைப்பட்டி ஜாங்கிட் நகரில் எங்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா ஒரு கிரவுண்ட் வீட்டு மனை வழங்கப்பட்டு இருந்தது. சம்பவத்தன்று நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, எங்களது இடத்தில் கிரானைட் கற்கள் கொட்டப்பட்டு இருந்தன.

மிரட்டிய அதிபர்கள் 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிரானைட் அதிபர்களிடம் கேட்டபோது, அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் நிலத்தை எங்களிடம் விற்று சென்று விட்டார்கள். அதேபோல் நீங்களும் எங்களிடம் நிலத்தை விற்றுவிடுங்கள் என்று கூறி ரூ.55 ஆயிரத்தை கொடுத்து மிரட்டி நிலத்தை வாங்கி கொண்டனர். எனவே அந்த நிலத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் முத்தனேந்தலை சேர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் கொடுத்த புகார் மனுவில், "எனது கணவர் கருப்பசாமி பி.ஆர்.பி. நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2007ஆம் ஆண்டு கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள், உங்கள் கணவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறினர். இதையடுத்து நானும் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். ஆனால் சில நாட்களிலேயே அவர் இறந்து விட்டார்.  

இதுகுறித்து குவாரி அதிபரிடம் கேட்டபோது, ரூ.10 லட்சம் நஷ்டஈடு தருவதாக கூறினார். ஆனால் இதுவரை நஷ்டஈடு வழங்க வில்லை. எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. மேலும் எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளதால் ரூ.10 லட்சம் நஷ்டஈட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதேபோல் குவாரி அதிபர்களால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் புகார் மனு அளித்தனர். சட்ட ஆணையர் சகாயம் இன்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளார்.


No comments:

Post a Comment